மானூர் அருகே போலீஸ் விசாரணையின் போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்


மானூர் அருகே போலீஸ் விசாரணையின் போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 18 Nov 2017 8:30 PM GMT (Updated: 18 Nov 2017 4:08 PM GMT)

மானூர் அருகே போலீஸ் விசாரணையின் போது, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மானூர்,

மானூர் அருகே போலீஸ் விசாரணையின் போது, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவருடைய உறவினரின் மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானது. இதுதொடர்பாக மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகார் கொடுக்க முருகன் தான் காரணம் என்று சதீஷ் நினைத்தார். இதையடுத்து சதீஷ் உள்பட 2 பேர் சேர்ந்து முருகன் வீட்டிற்கு சென்று அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகன் மானூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக சப்–இன்ஸ்பெக்டர்கள் அருண் நாராயணன், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சதீஷ் வீட்டிற்கு சென்றனர்.

தற்கொலை முயற்சி

சதீஷிடம் விசாரணை நடத்திய போது அவர் போலீசாரை அவதூறாக பேசி விட்டு, பணி செய்யவிடாமல் தடுத்தார். பின்னர் வீட்டின் ஒரு அறையில் சென்று கதவை பூட்டிக் கொண்டு சதீஷ் தூக்குப்போட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கதவை உடைத்து சென்று அவரை காப்பாற்றினார்கள். பின்னர் அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story