வாள் சண்டை வீரர், குமரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை


வாள் சண்டை வீரர், குமரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 18 Nov 2017 11:00 PM GMT (Updated: 18 Nov 2017 6:59 PM GMT)

புதுடெல்லியில் 201 நாட்கள் போராட்டம் நடத்திய வாள் சண்டை வீரர், குமரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை

நாகர்கோவில்,

திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் தேமானூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (வயது 29). வாள் சண்டை வீரரான இவர், மது விலக்கு அமல்படுத்த கோரி நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். குமரி மாவட்டத்தில் சசிபெருமாள் நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டார். அதன்பின்பு ஆற்றூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் புதுடெல்லி சென்று நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் சுமார் 201 நாட்கள் தனி நபராக போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் குமரி மாவட்டம் வந்த அவர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலக வாசல் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பூரண மதுவிலக்கை அமல்படுத்து என்று அச்சிடப்பட்டிருந்த ஒரு அட்டையையும் அவர் கையில் பிடித்திருந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்த கூடாது என்றும், உடனே அங்கிருந்து செல்லும்படியும் அவரிடம் வலியுறுத்தினர். ஆனால் டேவிட்ராஜ் அங்கிருந்து செல்லவில்லை. அதைத் தொடர்ந்து, சப்–இன்ஸ்பெக்டர்கள் மோகனஅய்யர் மற்றும் அணில்குமார் ஆகியோர் டேவிட்ராஜை கைது செய்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story