நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மேலூரில் நாளை கடை அடைப்பு போராட்டம்


நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மேலூரில் நாளை கடை அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:00 AM IST (Updated: 19 Nov 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஒருபோக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காமல், நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மேலூரில் நாளை கடையடைப்பு பேராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.

மேலூர்,

முல்லைப்பெரியாறு, வைகை ஒரு போக பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று மாலை மேலூரில் நடைபெற்றது. சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மேலூர் பகுதி விவசாயிகள், வர்த்தக, வக்கீல்கள் சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் வருமாறு:– முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் கட்டிய பின்பு 3 கட்டங்களாக கால்வாய்களில் தண்ணீர் திறப்பது மரபாக இருந்து வருகிறது.

முதலில் கம்பம் பள்ளத்தாக்கு, பின்னர் கள்ளந்திரி வரையிலான இருபோக பாசன பகுதி, அதனை தொடர்ந்து மேலூர் ஒருபோக பாசன பகுதி என கால்வாய்களில் முறை வைத்து தண்ணீர் திறப்பது வழக்கமாகும். அதன் பின்னரே தண்ணீர் இருப்பு அளவை பொறுத்து நீட்டிப்பு கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் அரசியல் நிர்பந்தம் காரணமாக மரபை மீறி மேலூர் ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்காமல் திருமங்கலம் பி.டி.ஆர். நீட்டிப்பு கால்வாய் மற்றும் தேனி அருகே தந்தை பெரியார் நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறப்பதை வண்மையாய் கண்டிக்கிறோம். இது கடந்த 3 ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியினால் பாதிப்படைந்த மேலூர் பகுதி விவசாயிகளை ஆத்திரமடைய செய்துள்ளது.

மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்காமல் மரபை மீறி நீட்டிப்பு கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) மேலூர் மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் முழுமையான கடையடைப்பு போராட்டமும், மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் பேசப்பட்டது. நிகழ்ச்சியில் பெட்டிக்கடை, பலசரக்குக்கடை, நகை, வட்டி கடைகள், ஓட்டல், வக்கீல் ஆகிய சங்கத்தினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடை அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story