குன்னூரில் பலத்த மழை; ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
குன்னூரில் பெய்த பலத்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்சரிந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்கும் வகையில் காணப்படுகிறது.
குன்னூர்,
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின்றி, வெயில் அடித்து வந்தது. மேலும் அவ்வப்போது கருமேகங்கள் கூடினாலும் பலத்த மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சில நிமிடங்களில் பலத்த மழையாக உருவெடுத்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குன்னூரில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குன்னூர் நகராட்சியின் 18–வது வார்டிற்கு உட்பட்ட ராஜாஜி நகர் குடியிருப்புகள் ஆற்றில் இருந்து 150 அடி உயரத்தில் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை பெய்ததால், ராஜாஜிநகர் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவினால் 3 வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளன. இந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பு கருதி நேற்று வீட்டை காலி செய்தனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–
ராஜாஜி நகர் குடியிருப்புகளின் பாதுகாப்பிற்காக ஆற்றில் இருந்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அதே சமயம் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்ல சரியான பாதை இல்லாமல் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த நிலையில் பலத்த மழையினால், தடுப்புச்சுவர் இல்லாததால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் பட்சத்தில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ராஜாஜி நகருக்கு தடுப்புச்சுவர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் குன்னூர்–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே அதிகாலை 3 மணிக்கு சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்னர் காலை 4 மணிக்கு போக்குவரத்து தொடங்கியது.