குற்றச்சாட்டில் சிக்கிய 764 போலீசாரின் தண்டனை குறைப்பு; டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன்


குற்றச்சாட்டில் சிக்கிய 764 போலீசாரின் தண்டனை குறைப்பு; டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன்
x
தினத்தந்தி 18 Nov 2017 10:30 PM GMT (Updated: 18 Nov 2017 7:38 PM GMT)

குற்றச்சாட்டில் சிக்கிய 764 போலீசாரின் தண்டனை குறைக்கப்பட்டு ஒள்ளது என்று கோவையில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் கூறினார்.

கோவை,

போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முகாமில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகரங்களை சேர்ந்த முதல்நிலை காவலர்கள் முதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வரை 1,246 பேர் கலந்துகொண்டனர். அவர்கள், டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தனர்.

இதில், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பேசும் போது கூறியதாவது:–

முதல்–அமைச்சரின் ஆணைப்படி ஒவ்வொரு மண்டலத்திலும் காவலர் குறைதீர்க்கும் முகாம் நடத்தப் படுகிறது. தெற்கு மண்டலத்துக்கு மதுரையிலும், மத்திய மண்டலத்துக்கு திருச்சியிலும், வடக்கு மண்ட லத்துக்கு காஞ்சீபுரத்திலும் முகாம் நடத்தப்பட்டது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் கோவையில் நடத்தப்படுகிறது.

மதுரையில் நடந்த முகாமில் 1054 பேர், திருச்சியில் 682 பேர், காஞ்சீபுரத்தில் 482 பேர் மனு கொடுத்திருந்தனர். கோவை முகாமில் 1200–க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பணியிடமாறுதல் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வழங்கப்பட்ட தண்டனையில் இருந்து நிவாரணம் கேட்டும், பதவி உயர்வு, பணி மூப்பு ஆகிய கோரிக்கைகளும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு அதிக மனு வந்து இருக்கிறது.

நவம்பர் 1–ந் தேதி முதல் புதிய காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பணியில் சேர்ந்ததும் பணியிடங்கள் நிரப்பப்படும். அதன்பிறகு இடமாறுதல் கோரிக்கை முழுமையாக நிறைவேறும். சென்னை வந்து செல்வதால் ஏற்படும் அலைச்சலை குறைக்க நானே வந்து மனுக்களை பெற்றேன்.

கடந்த 10 மாதத்தில் மட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 1,600 போலீசார் தண்டனை பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். விசாரணைக்கு பின்னர் 764 போலீசாரின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. 21 பேரின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 800 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்ட 109 பேரில் 44 பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 19 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு, ஓய்வு கால பலன்களை முழுமையாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு வந்திருக்கும் போலீசார் எப்படி உங்களது கோரிக்கைகளை வைக்கிறீர்களோ, அது போல காவல் நிலையத்துக்கு வரும் புகார்தாரரின் நியாயமான கோரிக்கை மனுக்களை பெற்று அதை சீர்தூக்கி பார்த்து நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் காவல் துறை மீது பொதுமக்களின் நம்பிக்கை மேலும் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறைதீர்ப்பு முகாமுக்கு தாராபுரம், மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றும் மஞ்சுளா என்பவர், கால்முறிந்து கட்டுப்போட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வேனில் வந்து இருந்தார்.

இதை அறிந்த டி.ஜி.பி. மேடையில் இருந்து இறங்கி, ஆம்புலன்ஸ் வேனில் இருந்த மஞ்சுளாவிடம் மனுவை பெற்றுக்கொண்டு உடல் நலம் விசாரித்தார். பின்னர், கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். உடனே மஞ்சுளா, டி.ஜி.பி.க்கு நன்றி கூறினார்.


Next Story