கோவையில் வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னர் ஆய்வு: மாநில அரசின் உரிமைகளை இழந்து வருகிறோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


கோவையில் வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னர் ஆய்வு: மாநில அரசின் உரிமைகளை இழந்து வருகிறோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2017 11:15 PM GMT (Updated: 18 Nov 2017 7:38 PM GMT)

கோவையில் வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னர் ஆய்வு நடத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை நாம் இழந்து வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

கோவையில் நடந்த இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

இந்திராவின் பிறந்த நாளான நவம்பர் 19–ந் தேதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கேட்டார். ஆனால் நான் நெல்லையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அன்று வரமுடியாது என்று கூறினேன். இருந்தாலும், இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும். இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் நவம்பர் 18–ந் தேதி அந்த பொதுக்கூட்டத்தை வைத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டேன். அதற்கு திருநாவுக்கரசர் ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன்பு கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது உங்கள் மகன் மு.க.ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வருவீர்களா? என்று கேட்பது உண்டு. அப்படி ஒருமுறை கேட்டபோது கலைஞர் அவர்களிடம் மு.க.ஸ்டாலினை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. அவரை முழுமையாக அரசியலுக்கு கொண்டு வந்தது இந்திரா காந்திதான் என்று பதிலளித்தார். அதற்கான பொருள் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

1976–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது நெருக்கடி நிலை பிரகடனத்தில் இருந்ததால் தி.மு.க.வை சேர்ந்த 500 பேர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் நானும் ஒருவன். அந்த சிறை அனுபவம் நான் அரசியலில் ஈடுபட உந்துசக்தியாக இருந்தது. வடஇந்தியாவில் இந்திரா காந்தியும், தென்இந்தியாவில் கலைஞரும் மாபெரும் பெரிய சக்தியாக விளங்கி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே அரசியல் உறவு மட்டும் அல்லாமல் சுயமரியாதை, சோசலிச உறவுகள் இருந்தை யாரும் மறுக்க முடியாது.

கோவையில் சில நாட்களுக்கு முன்பு கவர்னர் அரசு அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து கேள்வி கனைகளை தொடுத்துள்ளார். இதன் மூலம் மாநில சுயாட்சி உரிமைகளை இழந்து வருகிறோம். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஜனவரி 26–ந் தேதி அந்தந்த மாநில கவர்னர்கள் தேசிய கொடியேற்ற வேண்டும் என்றும், ஆகஸ்டு 15–ந் தேதி அந்தந்த மாநில முதல்– அமைச்சர்கள் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதம் எழுதினார்.

அந்த கடிதம் எதிரொலியாக ஆகஸ்டு 15–ந் தேதி முதல்– அமைச்சர்கள் கொடியேற்றும் நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்– மந்திரிகள் ஆகஸ்டு 15–ந் தேதி அன்று கொடியேற்றும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் தலைவர் கலைஞர்.

ஆனால் இப்போது நீட் தேர்வு உள்பட பல்வேறு உரிமைகளை நாம் படிப்படியாக இழந்து வருகிறோம். அதை பற்றி மத்தியில் உள்ள மதவாத ஆட்சியோ, மாநிலத்தில் உள்ள குதிரைபேர ஆட்சியோ சிந்தித்து பார்ப்பது இல்லை. பருவமழை பாதிப்பு, வர்தா புயல் பாதிப்பு, டெங்கு காய்ச்சல் பாதிப்புகளுக்கு நிதிகோரி முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அதற்கான நிதி வரவில்லை.

ஆனால் 1969–ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது ரூ.100 கோடியே 25 லட்சம் நிதி வேண்டும் என்று கலைஞர், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். அவர் கேட்ட அடுத்த நாளே அந்த நிதி கிடைத்தது. ஆனால் இப்போதைய நிலை என்ன? முதல்– அமைச்சர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும் நிதியோ, திட்டங்களோ வருவது இல்லை. இதன் மூலம் நாம் மாநிலத்தின் உரிமைகளை இழந்து வருகிறோம். எனவே மாநில சுயாட்சியை மீட்டு எடுக்கவும், மத்தியில் ஆளும் மதவாத சக்தியை தூக்கி எறியவும் இந்திரா காந்தி பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் அனைவரும் சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story