சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு முற்றுகை
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டை உதவி பேராசிரியர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், கடந்த 2013–ம் ஆண்டு முதல் தமிழக அரசே பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. நிதிநெருக்கடி பிரச்சினையை சமாளிக்க பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு நடவடிக்கையாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு வழங்கவேண்டிய விடுமுறை உள்ளிட்ட பணி பயன்களை அந்தந்த கல்லூரி நிர்வாகம் செய்யவில்லை. இதுகுறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே பணிபுரிந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திடமும் உதவி பேராசிரியர்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100–க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் ஒன்று திரண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் மணியன் வீட்டு முன்பு நேற்று காலை 9.30 மணி அளவில் வந்தனர். அவர்கள் விடுமுறை உள்ளிட்ட பணி பயன்களை நிறைவேற்ற வலியுறுத்தி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சிலர் வீட்டின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலைநகர் ஏழுமலை, சிதம்பரம் தாலுகா அம்பேத்கார், சிதம்பரம் நகரம் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர், மரியாதை இல்லாமல் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த உதவி பேராசிரியர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலையிட்டு, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து உதவி பேராசிரியர்கள் 4 பேரை மட்டும், துணைவேந்தர் மணியனை சந்திக்க போலீசார் அனுமதித்தனர்.
அப்போது துணைவேந்தர் மணியன், உங்களது பிரச்சினை குறித்து ஒரு வாரத்துக்குள் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மதியம் 12.30 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு உதவி பேராசிரியர்கள் கலைந்து சென்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த தேவி. இவர், தஞ்சாவூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் தேவி கலந்து கொண்டார். மதியம் 12 மணி அளவில் திடீரென தேவி மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக உதவி பேராசிரியர்கள், அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். 10 நிமிடங்களுக்கு பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.