ஊஞ்சலூர் அருகே தடுப்பணையில் குளித்தபோது சுழலில் சிக்கி 2 பேர் சாவு


ஊஞ்சலூர் அருகே தடுப்பணையில் குளித்தபோது சுழலில் சிக்கி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2017 9:45 PM GMT (Updated: 18 Nov 2017 8:33 PM GMT)

ஊஞ்சலூர் அருகே தடுப்பணையில் குளித்தபோது சுழலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.

ஊஞ்சலூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மகன் விஜயகுமார் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். விஜயகுமாரின் தம்பி பிரபாகரன் (24). காங்கேயத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ரவிக்குமார் (27). வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் பிரவீன் (29). விஜயகுமார், ரவிக்குமார், பிரவீன் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் உள்பட 8 பேர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே காரணம்பாளையம் தடுப்பணையை பார்ப்பதற்காக சென்றார்கள்.

அப்போது அவர்கள் அணை அருகில் விற்கப்படும் மீன்வறுவலை வாங்கி சாப்பிட்டார்கள். பின்னர் தண்ணீரைப்பார்த்ததும் அவர்களுக்கு தடுப்பணையில் இறங்கி குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 8 பேரும் தடுப்பணையில் இறங்கி குளித்தனர். இதில் விஜயகுமாரும், ரவிக்குமாரும் தடுப்பணையில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் 2 பேரும் சுழலில் சிக்கினார்கள். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தெரியவரவே தடுப்பணையில் ஆங்காங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமார், ரவிக்குமார் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story