பாராளுமன்றம் கூடும்போது பிரதமரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்; நாராயணசாமி பேட்டி


பாராளுமன்றம் கூடும்போது பிரதமரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்; நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2017 12:00 AM GMT (Updated: 18 Nov 2017 8:48 PM GMT)

கவர்னரின் செயல்பாடுகள் குறித்து முறையிட பிரதமர் மோடியை சந்திக்க பல முறை அனுமதி கேட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கி தர பிரதமர் மறுக்கிறார், எனவே பாராளுமன்றம் கூடும்போது பிரதமரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கவர்னர் அதிகாரிகளை அழைத்து துறை ரீதியான ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். ஆனால் கவர்னருக்கு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. மற்ற மாநில கவர்னர்களைவிட புதுவை மாநில கவர்னருக்கு கூடுதலாக ஒரே ஒரு அதிகாரம்தான் உள்ளது. அதாவது அமைச்சரவை எடுத்து அனுப்பும் கொள்கை முடிவுகளை, கவர்னர் ஏற்க விரும்பவில்லை என்றால் ஜனாதிபதிக்கு அதை அனுப்ப வேண்டும். ஆனால் மற்ற மாநில கவர்னர்கள் அமைச்சரவை எடுத்து அனுப்பும் கொள்கை முடிவுகளில் ஏற்க விரும்பவில்லை என்றால் திரும்பி அமைச்சரவைக்குத்தான் அனுப்ப வேண்டும். மீண்டும் அமைச்சரவை அதையே கொள்கை முடிவாக எடுத்து அனுப்பினால் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

டெல்லி நாட்டின் தலைமையிடமாக இருப்பதால் சட்டம்–ஒழுங்கு, நிலம், நிதி ஆகியவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி முதல்–அமைச்சர் அம்மாநில கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் அரசின் அன்றாட செயல்பாடுகளை நடத்தும் கடமையும், பொறுப்பும் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு உண்டு, அதில் கவர்னர் தலையிடக்கூடாது என கூறியுள்ளது. ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.

புதுச்சேரி நிர்வாகத்தின் விதிமுறைகளை சுட்டிக்காட்டியும், அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட அதிகாரம் இல்லை என்று கவர்னருக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் கவர்னர் அதை கேட்காமல் அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக கூட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

தமிழக அமைச்சர்கள் கவர்னர் நேரிடையாக தலையிடலாம் என்று கூறி தங்கள் அதிகாரத்தை கவர்னரிடம் வழங்கி சரணாகதி அடைந்துள்ளனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியோ முதல்வராக இருந்தால் இதுபோல் கவர்னர் செயல்பட முடியுமா? விடுவார்களா? ஜனாதிபதி மத்திய அரசின் துறை ரீதியான அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உத்தரவு பிறப்பித்தால் ஏற்பாரா? பிரதமருக்கு ஓரு சட்டம், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அம்மாநில கவர்னர்கள் இதுபோன்று ஆய்வு நடத்துகின்றனரா? நடத்த முடியுமா?

பா.ஜனதா கட்சி தமிழக அரசை பினாமியாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்ய நினைக்கிறது. அமைச்சரவைக்கான உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது என தமிழக அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் சரித்திரம பதில் சொல்லும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். டெல்லியில் இருந்து திணிக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு நிறைவேற்ற முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் 2 ஆட்சி முறையும் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளுக்கு யாரும இடையூறாக இருக்கக்கூடாது. அவ்வாறு இடையூறு செய்தால் அவர்கள் மக்கள் விரோதிகள். அவர்கள் இன்று இருப்பார்கள், நாளை போய்விடுவார்கள்.

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள்தான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அவரவர் எல்லைக்குள் அவரவர் செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றம் யாருக்கு, எது அதிகாரம் என்பதை தெரியப்படுத்தும். கவர்னரின் எல்லை மீறிய செயல்பாட்டிற்கு நீதிமன்ற கதவை தட்டுவதைத்தவிர வேறு வழி இல்லை. புதுச்சேரிக்கு டெல்லியைவிட கூடுதல் அதிகாரம் இருப்பதால், டெல்லி அரசு தொடர்ந்துள்ள வழக்கில் புதுச்சேரி எப்படி இணைய முடியும்? தனி வழக்கு போட ஆலோசித்து வருகின்றோம்.

கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடுகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். அனைத்து கட்சி கூட்டத்தில் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறுத்தி வைத்துள்ளோம். கவர்னரின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் முறையிட எனக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டு 3 மாதங்கள் ஆகின்றது.

அதுபோல் எனது தலைமையில் அமைச்சர்கள் சந்திக்க நேரம் கேட்டு 4 மாதங்கள் ஆகின்றது. ஆனால் நேரம் ஒதுக்கித்தரப்படவில்லை. தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்வரை பிரதமர் சந்திக்கின்றார். ஆனால் என்னை சந்திக்க மறுக்கிறார். இதனால் பாராளுமன்றம் கூடும்போது பிரதமரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story