சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்


சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:30 AM IST (Updated: 19 Nov 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அகரம்சீகூர் ஊராட்சியில் அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள வடக்கு வீதியின் சாலை சேறும், சகதியுமாய் உள்ளது. இந்த தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேற்றிலே நடந்து செல்வதால் கால்களில் புண்கள் உண்டாகி மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த தெரு வழியாகத்தான் அருகில் உள்ள வயல்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டும். சிறு மழை பெய்தாலே தெரு முழுவதும் சேறும், சகதியுமாய் ஆகிவிடுகிறது. மேலும் தண்ணீர் தேங்கி குளம் போல் நிற்பதால் புழுக்கள் உற்பத்தியாகி கொசுக்கள் அதிக அளவில் உள்ளன.

நாற்று நடும் போராட்டம்

மேலும் இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி வேப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் குன்னம் தாசில்தாரிடம் பலமுறை பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராஜேந்திரன் தலைமையில் வடக்கு வீதியில் சேறும், சகதியுமாய் காணப்படும் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி செயலாளர் சுமதி செல்வம் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story