அரசு பஸ் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்


அரசு பஸ் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 18 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-19T02:51:34+05:30)

கீழ்வேளூரில் அரசு பஸ் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது. அப்போது டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

கீழ்வேளூர்,

நாகையில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கீழ்வேளூர் வழியாக கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை கீழ்வேளூரை அடுத்த அகரகடம்பனூரை சேர்ந்த பாலகுரு என்பவர் ஓட்டி சென்றார். இதில் கண்டக்டராக திருவாரூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். பஸ் கீழ்வேளூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசாணி குளம் அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்று உருண்டு ஓடி அருகில் இருந்த புதருக்குள் விழுந்தது. உடனே டிரைவர் பாலகுரு பஸ்சை சாமர்த்தியமாக சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டார்.

உயிர் தப்பினர்

இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் சென்றனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போக்குவரத்து பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர். 

Next Story