காவலில் எடுக்கப்பட்டுள்ள மோசடி நிதி நிறுவன உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை


காவலில் எடுக்கப்பட்டுள்ள மோசடி நிதி நிறுவன உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 19 Nov 2017 4:30 AM IST (Updated: 19 Nov 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் சரண் அடைந்த மோசடி நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தை நிர்மலன் (வயது 50) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிறுவனத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பணம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஓணப் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் உரிமையாளர் நிர்மலன் மற்றும் ஊழியர்கள் தலைமறைவாகினர். நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அதில் பணம் செலுத்தியிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நிதி நிறுவனம் முன் வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமறைவான நிர்மலனை கைது செய்து பணத்தை மீட்டு தரக்கோரி தினமும் போராட்டம் நடந்தது. வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் குதித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது.

மோசடி நிதி நிறுவனத்தில் இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டதால் இருமாநில போலீசாரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர்.  நிதி நிறுவனத்தில் அதிரடியாக புகுந்து ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் நிதி நிறுவன பங்குதாரர்கள் சிலரை கைது செய்தனர். நிர்மலன் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் கடந்த 15–ந்தேதி மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிர்மலனிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே மோசடி குறித்து விவரங்கள் தெரியவரும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நிர்மலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, வருகிற 22–ந்தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது.

இதனையடுத்து நிர்மலனை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். அவரிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்துரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

நிர்மலனை நாகர்கோவில் அழைத்து வந்திருப்பதால் வாடிக்கையாளர்களால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பொருளாதார குற்றப்பிரிவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு பால்துரை கூறியதாவது:–

 நிதி நிறுவன அதிபர் நிர்மலனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். அவர் மோசடி செய்த பல கோடி ரூபாய் பணத்தில் ஆங்காங்கே சொத்துக்கள் வாங்கி இருக்கிறார். இந்த சொத்துக்களை விற்று வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக அவர் தெரிவித்து உள்ளார். இதனால் அவருடைய சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும், இவரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ரம்யா பாரதி குமரி மாவட்டம் வரவுள்ளார். அவர் வந்ததும் நிர்மலனை மத்தம்பாளையில் அவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story