2 கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்
நகைக்கடையில் துளைபோட்டு கொள்ளையடித்த 2 கொள்ளையர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகா லட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் முகேஷ்குமார் (வயது 37). இவரது கடையின் மேற்கூரையில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நகைக்கடை மாடியில் உள்ள கடையை ராஜஸ்தான் மாநில வாலிபர்கள் 2 பேர், துணிக்கடை வைக்கப்போவதாக கூறி வாடகைக்கு எடுத்து இருந்தனர். மாடியில் உள்ள கடையில் தரை தளத்தை துளையிட்டு அதன் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிந்தது.
கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரும் வடமாநில வாலிபர்கள் என்பதால் அவர்களை பிடிக்க போலீசார் புதிய யுக்தியை கையாண்டனர். சென்னை முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு கைதான வடமாநில வாலிபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
அதில் 2014–ம் ஆண்டு மாதவரம் தணிகாசலம் நகரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக ராஜஸ்தானை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டதும், தற்போது அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதும் போலீசாரின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து அந்த வாலிபர்களின் புகைப்படங்களை போலீஸ் நிலையத்தில் இருந்து சேகரித்த போலீசார், அவற்றை கட்டிட உரிமையாளர் பாண்டுரங்கன், நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமார் இருவரிடமும் காண்பித்து அடையாளம் காட்டும்படி தெரிவித்தனர்.
அந்த புகைப்படத்தை பார்த்த இருவரும், அதில் இருப்பவர்கள்தான் துணிக்கடை வைக்கப்போவதாக கடையை வாடகைக்கு எடுத்ததாக உறுதி செய்தனர். அந்த வாலிபர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானதால் 2 பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அவர்களது பெயர் நாத்தூராம் (25), தினேஷ்சவுத்திரி (20) ஆகும்.
அந்த புகைப்படத்தை வைத்து 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். 2014–ம் ஆண்டு நாத்தூராம், தினேஷ்சவுத்திரி இருவரும் சங்கிலி பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவர்களை புழல் சிறையில் யார், யாரெல்லாம் சந்தித்து பேசினார்கள்?. அவர்களின் பெயர், முகவரி என்ன?. இருவரையும் ஜாமீனில் வெளியே எடுத்த வக்கீலின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த தகவல்களை வைத்து 2 பேரும் எந்த பகுதியில் குடியிருந்தனர்? வேறு எங்கெல்லாம் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்?. என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதால் விரைவில் அவர்களை பிடித்து விடுவோம் என போலீஸ் உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.