மாணவியின் மகத்துவம்


மாணவியின் மகத்துவம்
x
தினத்தந்தி 19 Nov 2017 7:44 AM GMT (Updated: 19 Nov 2017 7:43 AM GMT)

10 வயதில் குழந்தை திருமணம் செய்துகொள்ள மறுத்தவர், இப்போது 15-வது வயதில் தனது கிராமத்திலேயே குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

10 வயதில் குழந்தை திருமணம் செய்துகொள்ள மறுத்தவர், இப்போது 15-வது வயதில் தனது கிராமத்திலேயே குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அந்த சிறுமியின் பெயர் பிரியா ஜங்கித். இவர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்திலுள்ள டஸ்டி கிராமத்தை சேர்ந்தவர்.

10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பிரியா, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தியின் அமைப்பில் இணைந்து குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ‘குழந்தை திருமணம் ஒரு பாவம், பெண் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்பதை தனது முழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரியாவின் குழந்தை திருமண எதிர்ப்பு முழக்கம் அவரை நாடு கடந்தும் பிரபலப்படுத்தி இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அவருடைய மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரை கைலாஷ் சத்தியார்த்தியுடன் சென்று சந்தித்திருக்கிறார். அதுபோல் பல்வேறு தரப்பில் இருந்தும் பிரியாவிற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

பிரியாவுக்கு 10 வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தபோது குழந்தை திருமணம் பற்றி எதுவும் தெரியாமலேயே இருந்திருக்கிறார். அதுபற்றி அவர் சொல்கிறார்:

‘‘நான் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு சென்றேன். வீட்டில் நிறையபேர் கூடியிருந்தார்கள். எனக்கு திருமணம் செய்து வைப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பது சட்டவிரோதம் என்பது எனக்கு தெரியாது. மறுநாள் பள்ளிக்கூடம் சென்றதும் ஆசிரியர்களிடம் அதுபற்றி கூறினேன். அவர்கள் உனக்கு திருமணம் செய்து வைப்பது சட்ட விரோதமானது என்றும், உன் பெற்றோர் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்றும் கூறினார்கள். மேலும் எனது திருமணம் குறித்து கைலாஷ் சத்தியார்த்தி நடத்தும் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து சிறுவயதில் திருமணம் செய்துவைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூறினார்கள்’’ என்கிறார்.

பிரியா பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம், குழந்தை திருமணம் பற்றியும், தனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதையும் கூறியிருக்கிறார். அவளின் பிடிவாதத்தால் பெற்றோர் திருமணம் செய்துவைக்கும் முடிவை கைவிட்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து குழந்தை திருமணத்துக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்தியார்த்தியின் அமைப்பிலேயே தன்னை இணைத்து கொண்டுவிட்டார். மாணவிகள் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். 

Next Story