வேன் கவிழ்ந்து விபத்து; வாலிபர் பலி 7 பேர் படுகாயம்


வேன் கவிழ்ந்து விபத்து; வாலிபர் பலி 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Nov 2017 11:00 PM GMT (Updated: 19 Nov 2017 9:53 PM GMT)

வெள்ளகோவில் அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரம் சென்னிமலைபாளையம் என்ற இடத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இவர்கள் அந்தப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருவார்கள்.

கடந்த சில நாட்களாக முத்தூரில் உள்ள குப்பயண்ணசாமி கோவிலில் அவர்கள் 7 பேரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் அங்கு நடைபெறும் கட்டிட வேலைக்கு தேவையான மணல் கொண்டு வருவதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர்.

அந்த வேனை முத்தூரை சேர்ந்த டிரைவர் செந்தில் ஓட்டிச்சென்றார். அவர்கள் முத்தூர் வேலம்பாளையம் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே வேனில் சென்ற போது திடீரென்று நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த தொழிலாளியான ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் பத்மபூர் கங்கஜமுனா சாகி வீதியை சேர்ந்த அமித்பெகரா (வயது 20) என்பவர் வேனில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பீமன் (31), ராகுல் (21), ஈஸ்வர் (30), சுரேஷ் (22), ஜெகதீஷ் (22), ராஜ்கிசோர்(45) மற்றும் முத்தூரை சேர்ந்த வேன்டிரைவரான செந்தில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியான அமித்பெகராவுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தன் ஆகியோர், வேன் டிரைவரான செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story