தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது சரத்குமார் பேட்டி


தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2017 11:00 PM GMT (Updated: 19 Nov 2017 10:09 PM GMT)

தமிழக அரசு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோற்றம் மக்களிடம் ஏற்படு கிறது என்று சரத்குமார் கூறினார்.

கோவை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் கோவை சிவானந்தா காலனி காமராஜர் கலையரங்கில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்குபேட்டி அளித்த போது கூறியதாவது:-

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி அரசியல் நிர்வாகத்தில் தலையிடுவதாக புதுவை மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் புதிய கவர்னர் பதவி ஏற்ற பிறகு ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். இது முரண்பாடாக உள்ளது. கவர்னர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட உரிமை இல்லை. மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் ஜனாதிபதி தலையிட சம்மதிப்பார்களா?

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டது குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து கூறும் போது இந்திய தோட்டாக்கள் இல்லை என தெரிவித்து உள்ளார். அவர் தெளிவு இல்லாமல் பதில் அளித்து இருக்கிறார். தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை மாநில அரசுக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியாது என முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கூறி இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கிறது. இதை ஆட்சியில் உள்ளவர்கள் கண்டிக்க வில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருப்பது போன்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஏற்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக சமத்துவ மக்கள் கட்சி குரல் கொடுக்கும். தேர்தல் வரும் போது, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 5 வருடம் நீடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரை பற்றி பேசாமல் அவர்களுக்கிடையே உள்ள சண்டை யை பற்றி பேசுவது வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதா இறந்த பின்னர் அ.தி.மு.க.வும், தமிழகமும் தேக்க நிலையில் உள்ளது.

ரஜினி, கமல் அரசியல் களத்திற்கு வரட்டும். அதன் பின்னர் பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சிமெண்டு, பெயிண்ட் உள் ளிட்ட கட்டுமான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.யை 28 சதவீதத்தில் இருந்து குறைத்து கட்டுமான தொழிலை பாதுகாக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முதன்மை துணை பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாவட்ட நிர்வாகிகள் பொன்னுசாமி, சின்னசாமி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வி.ஆர்.வேலுமயில், அசரியா உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story
  • chat