உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஒரே வாரியம் மின்சார வாரியம் தான் அமைச்சர் பேச்சு


உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஒரே வாரியம் மின்சார வாரியம் தான் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டிலேயே உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஒரே வாரியம் மின்சார வாரியம் தான் என்று ஈரோட்டில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

ஈரோடு,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாநில அளவிலான மகளிர் விளையாட்டு போட்டிகள் ஈரோடு ரங்கம்பாளையத்தில் கடந்த 4 நாட்கள் நடைபெற்றது. இதில் கேரம், செஸ், மேஜை பந்து, இறகுப்பந்து, எறிபந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 8 மண்டலங்களை சேர்ந்த மின்சாரத்துறையில் பணியாற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் செல்வகுமாரசின்னையன், சத்தியபாமா, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மின்சார வாரிய தலைமை பொறியாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள். அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டிலேயே உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஒரே வாரியம் மின்சார வாரியம் தான். நேர்மையாகவும், உடனுக்குடனும் மின்சாரத்துறை ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். மின்வெட்டு ஏற்பட்டதும் நள்ளிரவாக இருந்தாலும் பெண் அதிகாரிகள்கூட சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அதிகாரிகளும் கஷ்டம் பாராமல் வேலை செய்கின்றனர். ஆனால் மின்சார வினியோகத்தில் சிறிய விபத்து ஏற்பட்டாலும் பொதுமக்கள் ஒட்டுமொத்த மின்சார வாரியத்தையும் சேர்த்து திட்டுகின்றனர்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மின்விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொடுங்கையூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் இறந்தனர். அங்குள்ள பில்லர் பாக்ஸ் திறந்து கிடந்ததால் அவர்கள் இறக்கவில்லை. சம்பவத்திற்கு முன்தினம் பழுது ஏற்பட்ட பில்லர் பாக்ஸ் சரிசெய்யப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையாததால் அங்குள்ள பொதுமக்கள் தரைவழியாக மின்இணைப்பை கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்தனர். அதனால் ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் மின் இணைப்பை கொடுத்தனர்.

பின்னர் அங்கு மழை பெய்து தண்ணீர் தேங்கியதில் ஒயரின் மேல் லேயர் உறிந்தது. இதனால் மின்சாரம் தாக்கி குழந்தைகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பல முறை விளக்கம் அளித்தும் எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் விபத்துக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறினேன்.

மின்சாரத்துறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு கொண்டு இருந்தது. அதன்பின்னர் படிபடியாக குறைந்து தற்போது ரூ.4 ஆயிரம் கோடியாக உள்ளது. மேலும், 2 ஆண்டுகளில் மின்சாரத்துறை லாபத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

விளையாட்டு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கோவை மண்டலம் பிடித்தது. 2-வது இடத்தை சென்னை மண்டலம் பெற்றது.


Next Story