மோசடி நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சம் முதலீடு செய்தவர் திடீர் சாவு பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
களியக்காவிளை அருகே மோசடி நிதிநிறுவனத்தில் ரூ. 40 லட்சம் முதலீடு செய்தவர் திடீரென இறந்தார். இதையடுத்து பொதுமக்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த ஓணம் பண்டிகையையொட்டி நிதிநிறுவனத்தை மூடிவிட்டு அதன் நிறுவனர் நிர்மலன் தலைமறைவானார். இதையடுத்து, அந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தங்களது பணத்தை திரும்ப தரக்கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன், கடந்த 15–ந்தேதி மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், இந்த நிதிநிறுவனத்தில் ரூ.40 லட்சம் முதலீடு செய்தவர் திடீரென இறந்தார். இதுகுறித்த விவரம் வருமாறு:–
கேரள மாநிலம் பரசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 70). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு பேருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது. மதுசூதனன் நிர்மல் கிருஷ்ணா நிதிநிறுவனத்தில் தனது மகள்களின் பெயரில் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் முதலீடு செய்திருந்தார். மகள்கள் வீடு கட்டுவதற்காக இந்த பணத்தை சேமித்து வைத்திருப்பதாக கூறி வந்தார்.
இந்தநிலையில், நிதிநிறுவனம் திடீரென மூடப்பட்ட தகவல் அறிந்ததும் மதுசூதனன் அதிர்ச்சி அடைந்தார். ‘ரூ.40 லட்சத்தை இழந்து விட்டோமே’ என்ற சோகத்தை தாங்க முடியாமல் கடந்த சில தினங்களாக மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதுசூதனன் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. பரசுவைக்கல் சந்திப்பில் வந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர்கள், நிதிநிறுவன வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பணத்தை உடனே கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே, இந்த நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் முதலீடு செய்த பாறசாலையை சேர்ந்தவர் வேணுகோபால் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், ரூ.40 லட்சம் இழந்தவர் இறந்த தகவல் வாடிக்கையாளர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.