பரப்பலாறு அணையின் நீர்மட்டம் 77 அடியாக உயர்வு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்


பரப்பலாறு அணையின் நீர்மட்டம் 77 அடியாக உயர்வு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2017 4:15 AM IST (Updated: 21 Nov 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

பரப்பலாறு அணையின் நீர்மட்டம் 77 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மலைப்பகுதியின் மேற்கு தொடர்ச்சிமலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும்.

இந்த அணையின் மூலம் தாசரிபட்டி, முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும்் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

77 அடியாக உயர்வு

சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. தற்போது அணையில் தண்ணீர் மட்டம் 77 அடியாக உள்ளது. அணையில் 109 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக 3 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர்மட்டம் 77 அடியாக உயர்ந்துள்ளதால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசனத்துக்கு...

இந்தநிலையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மெய்யழகன், செயற்பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் தனசேகரன் ஆகியோர் அணையில் ஆய்வு நடத்தினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், அணையின் நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. இந்த தண்ணீர் பொதுமக்களின் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இதனால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைப்பகுதியில் மழை பெய்து 88 அடியாக நீர்மட்டம் உயரும் பட்சத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றனர். 

Next Story