தமிழகம்–கேரளாவை சேர்ந்தவர்களுக்கு ரூ.100 கோடி கடனாக கொடுத்தேன் மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வாக்குமூலம்
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பலருக்கு ரூ.100 கோடி கடனாக கொடுத்தேன் என மோசடி நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தை நிர்மலன் (வயது 50) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிறுவனத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஓணப் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் உரிமையாளர் நிர்மலன் மற்றும் ஊழியர்கள் தலைமறைவாகினர். நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அதில் பணம் செலுத்தியிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த நிதி நிறுவனம் முன் வாடிக்கையாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். மோசடி நிதி நிறுவனத்தில் இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டதால் இருமாநில போலீசாரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நேற்று வரை மொத்தம் 4968 பேர் பணம் செலுத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நிதி நிறுவன பங்குதாரர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். நிர்மலன் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் கடந்த 15–ந்தேதி மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து நிர்மலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, 22–ந்தேதி (நாளை) வரை 5 நாட்கள் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது.
இதனையடுத்து நிர்மலனை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அழைத்து வந்தனர். அவரிடம், குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்துரை, திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலனை நாகர்கோவில் அழைத்து வந்திருப்பதால் வாடிக்கையாளர்களால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பொருளாதார குற்றப்பிரிவில் கூடுதல் போலீஸ் வாபப
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.366 கோடியை நிர்மலன் மோசடி செய்துள்ளார். அதில் ரூ.250 கோடி அளவுக்கு சொத்துக்களுக்கான ஆவணங்கள் உள்ளன. மீதமுள்ள பணத்துக்கான விவரங்கள் என்ன ஆனது? என்பது தெரியாமல் உள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கு கடனாக பணம் கொடுத்தேன். அந்தப்பணத்தை அவர்கள் திரும்பத்தரவில்லை. அவை சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும் என்றும், அவர்களது பெயர், விவரங்கள் சிலவற்றை வாக்குமூலமாக நிர்மலன் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தான் கேரளாவில் உள்ள கோர்ட்டில் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் பணம் கொடுத்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் பலருக்கு கடன் கொடுத்ததாகச் சொல்லி தனக்கு வேண்டியவர்களிடம் பணத்தை கொடுத்து வைத்திருப்பா£ரா? அல்லது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்திருப்பாரோ? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கோணங்களில் போலீசார் நிர்மலனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் சில கேள்விகளுக்கு நிர்மலன் பதில் அளிப்பதில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு சென்னை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) லலிதா லட்சுமி இன்று நாகர்கோவில் வந்து நிர்மலனிடம் விசாரணை நடத்துகிறார். இதில் பல தகவல்கள் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.