குமரி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டிய மழை மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம்
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்ததது. கொட்டாரம் பகுதியில் அதிகபட்சமாக 82 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மின்னல் தாக்கியதில் ஏராளமான வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை கொட்டியது. இரவில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த மழை நள்ளிரவு 2 மணி முதல் மீண்டும் பலத்த மழையாக பெய்தது. அப்போது நாகர்கோவில் நகரில் பலத்த இடி– மின்னலுடன் மழை கொட்டியது. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சில மணி நேரம் வரை தொடர்ந்தது.
இதனால் நாகர்கோவில் நகரின் கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு சாலை, கோர்ட்டு ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, வடசேரி ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரோடு, வடசேரி சந்திப்பு பகுதி என சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சவேரியார் பேராலய சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை தண்ணீரும் மழை வெள்ளத்துடன் கலந்து ஓடியது.
இந்த மழையால் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நாகர்கோவில் இருளப்பபுரம், டி.வி.டி. காலனி, செந்தூரான் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகளில் பலத்த மின்னலின் காரணமாக மின்சாதனங்கள் பழுதுபட்டன. சில இடங்களில் மின்ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் பல வீடுகளில் டி.வி., மின்விசிறி, மின் பல்புகள், டியூப்லைட்கள், மின் இணைப்பு பெட்டிகள் போன்றவை எரிந்து சேதம் அடைந்தன.
இருளப்பபுரம் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் இருந்த வாஷிங்மெஷின் தீப்பற்றி எரிந்தது. அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் தற்போது வசித்து வருகிறார்கள். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வாஷிங்மெஷினில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் வாஷிங் மெஷின் முழுமையாக எரிந்து நாசம் ஆனது.
அப்பகுதியில் உள்ள உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து டிரான்ஸ்பார்மரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மரின் அருகாமையில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள மின்பெட்டிகள் தீப்பற்றி மின் அழுத்தம் காரணமாக எரிந்து நாசம் ஆனது. மேலும் இருளப்பபுரத்தின் மற்றொரு பகுதியிலும் மின்கம்பிகள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் இருளில் மூழ்கின. இதேபோல் பலத்த மின்னல் காரணமாக செந்தூரான்நகர், டி.வி.டி. காலனி பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்விசிறி, டி.வி., டியூப்லைட்கள், பல்புகள் சேதம் அடைந்தன. இவ்வாறு நகரில் உள்ள ஏராளமான வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று காலை பறக்கை சந்திப்பு பகுதியில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
நாகர்கோவிலில் பெய்த மழையைப்போன்று மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 82 மி.மீ. அளவும் மழை பதிவாகியிருந்தது.
மாவட்டம் முழுவதும் மற்ற இடங்களில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–
பேச்சிப்பாறை– 20, பெருஞ்சாணி– 46.4, சிற்றார் 1– 40.8, சிற்றார் 2– 41.4, மாம்பழத்துறையாறு– 41, முக்கடல்– 34.2, நாகர்கோவில்– 61.2, மயிலாடி– 60, சுருளோடு– 35.2, பூதப்பாண்டி– 46, கன்னிமார்– 76.2, பாலமோர்– 21.4, நிலப்பாறை– 55, இரணியல்– 53, ஆனைக்கிடங்கு– 52.4, குளச்சல்– 49.4, குருந்தங்கோடு– 40.3, அடையாமடை– 27.5, கோழிப்போர்விளை– 32.7, முள்ளங்கினாவிளை– 38, புத்தன்அணை– 47.2, திற்பரப்பு– 38.6.
இந்த மழையினால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து கணிசமாக இருந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 482 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 404 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்–1 அணைக்கு 79 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 23.90 அடியாக இருந்தது. இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை மற்றும் நள்ளிரவு பெய்த மழையினால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளங்களும் நிரம்பி வருகின்றன.