சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 104 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 104 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 104 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

போக்குவரத்து கழக கும்பகோணம், தஞ்சை நாகை கிளை சார்பில் அரசு போக்குவரத்து கழக தலைமை இடமான கும்பகோணம் கோட்ட அலுவலக வாயிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ரவி, பொருளாளர் கோவிந்தராஜன், தஞ்சாவூர் கிளை தலைவர் ஞானசேகரன், செயலாளர் மாரிமுத்து, நாகை தலைவர் சுகுமார், செயலாளர் ராமலிங்கம், மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியத்தை மாதந்தோறும் முதல் தேதியில் வழங்க வேண்டும், மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களையும் இணைக்க வேண்டும். 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் மத்திய-மாநில அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவது போல போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஊதிய உயர்வை அறிவிக்கவேண்டும். ஓய்வு பெறும் அன்று அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கும்பகோணம் ரெயிலடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 104 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story