உலக மீனவர் தினத்தையொட்டி கடலூர் துறைமுக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
உலக மீனவர் தினத்தையொட்டி கடலூர் துறைமுக மீனவர்கள் நேற்று கடலூக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர் முதுநகர்,
தங்களது கடின உழைப்பின் மூலம் அந்நிய செலவாணியை அதிகமாக ஈட்டிக்தரக்கூடிய மீனவர்களை கவுரவப்படுத்தும் வகையிலும், மீனவர்களின் வாழ்வு செழிக்கும் விதமாகவும் நவம்பர் 21–ந்தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.
வழக்கமாக கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100–க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 டன் அளவுக்கு மீன்வரத்து இருக்கும். இவைகள் அனைத்தும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலத்திற்கு பின், போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பெரும் நஷ்டத்தையே சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று உலக மீனவர் தினம் கடலூர் துறைமுகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒரு சிலரை தவிர பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் அனைத்தும் துறைமுக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.