செங்குன்றம் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை
செங்குன்றம் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.19 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் எம்.ஜி.ஆர். நகர் வி.ஜி.தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 18–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை அயனாவரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு மனைவி சத்யாவுடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.19 ஆயிரம் மற்றும் கால் கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மமனிதர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது.
கொள்ளை சம்பவம் குறித்து சோழவரம் போலீசில் பிரபாகரன் புகார் செய்தார். இதனையடுத்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.