என்ஜினீயர் வீட்டில் பணம், ஏ.டி.எம். கார்டுகள் திருட்டு கார் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு


என்ஜினீயர் வீட்டில் பணம், ஏ.டி.எம். கார்டுகள் திருட்டு கார் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 22 Nov 2017 9:12 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் பணம், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் சைமன்நகரை சேர்ந்தவர் அஜித் (வயது 31), சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். நாகர்கோவில் சைமன் நகரில் உள்ள வீட்டில் அவரின் பெற்றோர் வசித்து வருகின்றனர். இவருடைய வீட்டில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டிமணி என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், அஜித்தின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று, ஆஸ்பத்திரியில் இருந்து அஜித்தின் தாயாரை அழைத்து வருவதற்காக பாண்டிமணி காரை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வராததால் பதற்றமடைந்த அஜித், அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், செல்போன் சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் அஜித்தின் செல்போனுக்கு, ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.6 ஆயிரம் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது.

இதனால் சந்தேகமடைந்த அஜித், வீட்டினுள் சோதனை செய்து பார்த்தார். அப்போது, 2 ஏ.டி.எம். கார்டு, காசோலை புத்தகம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதன்பிறகே, பணம் மற்றும் ஏ.டி.எம்.கார்டுகளை பாண்டிமணி திருடிசென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அஜித் நேசமணிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அஜித்தின் கார் வடசேரி பஸ்நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், காரை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். காரை பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறி பாண்டிமணி தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாகியுள்ள பாண்டிமணியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story