மாநில சுயாட்சி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு


மாநில சுயாட்சி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 11:15 PM IST)
t-max-icont-min-icon

மாநில சுயாட்சி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தமிழன், தனது பெருமைகளை பேசும் போது தூத்துக்குடி முத்து இடம் பிடிக்கிறது. அந்த தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி பெருமை சேர்க்கப்பட்டு உள்ளது. எப்போதும் திட்டங்களை வகுப்பதும், அதை மக்களுக்காக செயல்படுத்துவதும் மட்டுமே அ.தி.மு.க. அரசின் நோக்கம் ஆகும். அண்ணாவின் கொள்கை வழியில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடந்துள்ளனர். அதே போல் இந்த அரசும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் நம்மை குறை கூறுகின்றனர். குதிரை பேர ஆட்சி என்றும், மைனாரிட்டி ஆட்சி என்றும் கூறி வருகின்றனர். இந்த அரசு மக்கள் பேராதரவை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்தி வருவதை, எப்படி மைனாரிட்டி என்று கூறமுடியும்.

தமிழக உரிமைகளை தாரை வார்ப்பதாக, அதாவது கச்சத்தீவு, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி, காவிரி, முல்லைப்பெரியாறு ஆகியவை குறித்து பேசுகின்றனர். 18 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க. அப்போதெல்லாம் இதை பற்றி பேசாதது ஏன்? ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் செயல்படுகின்ற ஆட்சி ஆகும். எதிர்கட்சிகளும், நம்மிடம் இருந்து பிரிநது சென்றவர்களும் பேசுவதை பற்றி கவலைப்படக்கூடாது. மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நாம் வெற்றி பெறுவோம்.

மாநில சுயாட்சி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. தமிழை இந்திய ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.

ஜெயலலிதாதான் தமிழுக்காக உண்மையிலேயே பாடுபட்டார். தமிழ் மொழியை காக்க வேண்டும் என்று அண்ணா கூறினார். அதிலிருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விலகியது கிடையாது. தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுத்தார். ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து எந்த காரணத்தாலும் விலகி விட மாட்டோம். அ.தி.மு.க. யாருக்கும் அடிபணியாது. எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். தமிழர்களின் உரிமைகளை மீட்க அவருடைய வழியில் பாடுபடுவோம்.

தமிழர்களுக்குள் ஜாதி, மதத்தால் வேறுபாடு இருக்க கூடாது. தமிழகம், தமிழ் மொழி, தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறிஉள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் என்பது வேறு. ஆனால் யாருக்கும் அடிபணிய மாட்டோம், நம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது, நாம் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள். பெரியார், அண்ணா கொள்கைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழ் மொழி, தமிழக மக்களை, தமிழர் நலனை காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய, தமிழக சபாநாயகர் தனபால் பேசுகையில் கூறியதாவது:–

தமிழக சட்டப்பேரவைக்கு 2–வது முறையாக என்னை தலைவராக்கிய ஜெயலலிதாவுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவரது பாராட்டுக்களையும் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவருக்கு துணை நிற்கும் ஓ.பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன்.

நான் சமீபத்தில் வங்காளதேசம் டாக்காவில் நடந்த மாநாட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு வந்த தலைவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு மிகவும் வருத்தப்பட்டனர். அதே நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்துவது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தனர். உலக மக்களின் பார்வையை ஈர்த்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் தன்னுடைய ரசிகர்களை நல்ல முறையில் பாதுகாத்தார். தூத்துக்குடியில் தியேட்டரில் தீவிபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியை எம்.ஜி.ஆர். மனிதாபிமானத்தோடு தனது கையால் தூக்கி நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கூறினார். அத்தோடு டூரிங் தியேட்டர்கள் இருக்க கூடாது. அனைத்து தியேட்டர்களிலும் தீப்பிடிக்காத தகர கூரைகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வாறு எம்.ஜி.ஆர். புகழை பேசிக்கொண்டே இருக்கலாம். அவரது புகழ் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு முன்னிலை வகித்த தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:–

2017–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மக்கள் ஆதரித்து கழக ஆட்சியை மீண்டும் தந்தனர். இதையொட்டி ஜெயலலிதா மறைந்து விட்டாலும், அவரது வழிகாட்டுதல்படி அமைந்த அரசு மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. தற்போது 25–வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.

சில குள்ள நரிகளின் ஊளை சத்தத்தை தூக்கி எறியும் வகையில் இந்த நூற்றாண்டு விழா அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்த போது, 1986–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கித் தந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். அந்த வகையில் தற்போது ஜெயலலிதா அறிவித்துச் சென்ற திட்டமான, தூத்துக்குடி மாநகருக்கு 4–வது குடிநீர் குழாய் திட்டம் தற்போது ரூ.292 கோடியில் செயல்படுத்தப்பட்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story