சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 500 பேர் கைது
ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவையில் 31 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை கிலோ ரூ.25 ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று தி.மு.க.வினர் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
கோவை சித்தாபுதூர் ஹரிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
வார்டு செயலாளர் சசிகுமார், மகளிரணி நிர்வாகி கனிமொழி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சவுந்தர்ராஜன் உள்பட பலர் கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ரேஷன்கடையை முற்றுகையிட சென்ற கார்த்திக் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் இடையர்பாளையம் ரோடு பிரிவில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் இளங்கோவன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகபாண்டி, லோகு உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ரேஷன் கடையை முற்றுகையிட முயன்ற முத்துசாமி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டைமேடு 82–வது வார்டு தி.மு.க. சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அரசை கண்டித்து, பாடை கட்டி தூக்கி வந்து ஒப்பாரி வைத்தும், கைகளில் திருஓடு ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கிருஷ்ணசாமிநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சேதுராமன், பாசமலர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமி, தங்கராஜ், காந்தன், சரவணன், துளசி ராஜ், எம்.எஸ்.பார்த்திபன் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. கிளை செயலாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.
சவுரிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பாபு, அரோமா நந்தகோபால், கணேசன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கோபால்சாமி, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவை நகரில் மொத்தம் 31 இடங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உள்பட மொத்தம் 500 பேர் கைது செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.