பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் 95 இடங்களில் ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற கோரியும், பாமாயில், பருப்பு தட்டுப்பாட்டை நீக்கவும், மளிகை பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் நகர பொருளாளர் பழனிசாமி, துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஜோதி நகரில் வட்ட செயலாளர் ஞானவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறையில் நகர தி.மு.க. சார்பில் ஸ்டோன்மோர் சந்திப்பில் உள்ள அமுதம் ரேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கோழிக்கடை கணேசன் தலைமை தாங்கினார்.

அவைத்தலைவர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் நகர தலைவர் குசலவன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் கருப்பையா, தொ.மு.ச. சவுந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நெகமம் அருகே பனப்பட்டியில் ஒன்றிய பொருளாளர் வேலுமணி தலைமையில் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆனைமலை பகுதியில் ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தக அணி செயலாளர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சமத்தூரில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சண்முக சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி செயலாளர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ரேஷன் கடையை பேரூராட்சி செயலாளர் சின்னசாமி தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உள்பட பலர் கலந்துகொண்டனர். எஸ்.மேட்டுப்பாளையத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் தலைமையில் ரேஷன் கடை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுல்தான்பேட்டை அருகே மலையடிபாளையத்தில் ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம் தலைமையில் ரேஷன் கடை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துமாணிக்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செஞ்சேரிபுத்தூர் பழனிசாமி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் மந்திராச்சலம், குமாரபாளையம் ஊராட்சி செயலாளர் சிவசக்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story