ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு, ரேஷன் கடையில் மானிய விலையில் வழங்கிவரும் சர்க்கரை விலையை இரு மடங்காக உயர்த்தியது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள், ஏழை-எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசுக்கு உணர்த்தும் வகையில் தமிழக அரசை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் பெரம்பலூரில் தெப்பக்குளம் அருகே உள்ள ரேஷன் கடை முன்பு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தெற்குத்தெரு ரேஷன் கடை முன்பு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையிலும், எளம்பலூர் சாலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் தலைமையிலும், ரோவர் சாலையில் பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் தலைமையிலும், ஆலம்பாடியில் பொதுக்குழு உறுப்பினர் பழக்கடை சிவக்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குன்னம் பகுதியில் ஆர்ப்பாட்டம்

குன்னம் பகுதியான வேப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் ஆலத்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் 25 இடங்களில் உள்ள ரேஷன் கடை முன்பு சுமார் 1,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் பெரியசாமி தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது.

வேப்பூர் பகுதியிலும்...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் லெப்பைக்குடிக்காடு, அத்தியூர், ஒகளூர், அகரம்சீகூர், கிழுமத்தூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங் களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஒகளூர் அன்பழகன், ஒன்றிய துணை செயலாளர் மீனா அன்பழகன், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயலாளர் ஜாகீர்உசேன், ஊராட்சி செயலாளர்கள் கிழுமத்தூர் சுப்ரியா வெங்கடேசன், திருமாந்துறை கருப்பையா, ஆடுதுறை பச்சமுத்து, ஒகளூர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 137 ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவித்தனர். 

Next Story