மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 34 இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,500 பேர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.13.50–ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், ரே‌ஷன் கடைகளில் ரே‌ஷன் பொருட்களை முறையாக வினியோகம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று34 இடங்களில் தி.மு.க.வினர் ரே‌ஷன் கடைகள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அருப்புக்கோட்டை நேரு மைதானம் அருகில் உள்ள ரே‌ஷன் கடை முன்பும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. காரியாபட்டி அரசு வங்கி அருகில் உள்ள ரே‌ஷன் கடை முன்பும், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் முகவூரிலும், விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் விருதுநகர் அகமதுநகரில் உள்ள ரே‌ஷன் கடை முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் 500 பெண்கள் உள்பட 2400 பேர் கலந்து கொண்டனர்.

சிவகாசி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாட்சியாபுரத்தில் உள்ள ரே‌ஷன் கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய தலைவரும், மாநில நிர்வாகியுமான வனராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் சாகுல்அமீது வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலை செல்வம், திலிபன் மஞ்சுநாத் உள்பட 150–க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கலந்து கொண்டனர். இதே போல் சிவகாசி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எம்.புதுப்பட்டியில் உள்ள ரே‌ஷன் கடையின் முன்பு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி நகர தி.மு.க. சார்பில் மருதுபாண்டியர் தெருவில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நகர செயலாளர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தங்கராஜ், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story