ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் சென்றதால் விபத்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவர் பலி


ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் சென்றதால் விபத்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவர் பலி
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 23 Nov 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் சென்றதால் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பெர்னாட்ராஜ் மகன் ஆகாஷ்(வயது17). பிளஸ்-2 மாணவரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்கள் 3 பேருடன் அப்பகுதியில் சென்றார்.

கும்பகோணம் வலையப்பேட்டை மாங்குடி அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆகாஷ் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.

பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக இறந்தார்.

அவரது நண்பர்கள் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் பெருமாண்டி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story