விவசாய எந்திரங்கள் வாங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறலாம் கலெக்டர் விவேகானந்தன் தகவல்


விவசாய எந்திரங்கள் வாங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறலாம் கலெக்டர் விவேகானந்தன் தகவல்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாய எந்திரங்கள் வாங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறலாம் என்று சோலைக்கொட்டாய் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி தாலுகா நாயக்கனஅள்ளி ஊராட்சி, சோலைக்கொட்டாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் 152 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட ரூ.40 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முகாமில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை வாயிலாக குடியிருப்புகளில் தனிநபர் கழிவறை அமைக்க ரூ.12 ஆயிரம் மானிய தொகையாகஅரசு வழங்குகின்றது. இந்த தொகையை பெற்று தனிநபர் கழிவறை அமைத்து பயன்படுத்திட அனைவரும் முன்வரவேண்டும். ஒரேநாளில் தனிநபர் கழிவறை கட்ட தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிநபர் கழிவறைகள் நமது மாவட்டத்தில் ஊரகவளர்ச்சி துறையின் மூலம் கட்டப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் தனிநபர் கழிவறையை அமைப்பதற்கு அந்தந்த தாலுகாவிற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ அல்லது ஊராட்சி செயலரையோ அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளில் இதுவரை 141 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 110 ஊராட்சிகளிலும் தனிநபர் கழிவறை அமைத்து பயன்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 12 ஆயிரம் விவசாயிகள் ரூ.28 லட்சம் பயிர் காப்பீடு செய்தனர். இவர்களுக்கு ரூ.4 கோடி நிவாரணத்தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விவசாய பயிர் காப்பீடு செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

விவசாய பயன்பாட்டிற்கான எந்திரங்களை வாங்க வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களை வாங்கி பயன்படுத்தலாம். பிறருக்கு விவசாய பயன்பாட்டிற்கு வாடகைக்கு விட்டும் பயன் பெறலாம். எனவே தமிழகஅரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த முகாமில் தோட்டக்கலை இணை இயக்குநர் அண்ணாமலை, உதவி கலெக்டர் ராமமூர்த்தி, தனித்துணை கலெக்டர் முத்தையன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டஅலுவலர் பத்மாவதி, மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் அமீர்பாஷா, மாவட்டவழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்டஆதிதிராவிடர் நலஅலுவலர் பாஸ்கர், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண் உதவி இயக்குநர் இளங்கோவன், கலால் உதவி ஆணையர் மல்லிகா, தாசில்தார் ஜெயலட்சுமி உள்பட அரசுதுறை அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story