மாஜிஸ்திரேட்டு முன்னால் 2 பேரை கத்தியால் வெட்டிய விசாரணை கைதி போய்வாடா கோர்ட்டில் பரபரப்பு


மாஜிஸ்திரேட்டு முன்னால் 2 பேரை கத்தியால் வெட்டிய விசாரணை கைதி போய்வாடா கோர்ட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2017 3:56 AM IST (Updated: 23 Nov 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

போய்வாடா கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்னால் 2 பேரை கத்தியால் விசாரணை கைதி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை,

போய்வாடா கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்னால் 2 பேரை கத்தியால் விசாரணை கைதி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 பேருக்கு கத்தி வெட்டு

மும்பை போய்வாடா போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஹரிசந்திர சிர்கர், மகேஷ், நரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்திருந்தனர்.

மூவரும் ஜாமீன் கேட்டு போய்வாடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்காக விசாரணை கைதிகள் 3 பேரும் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

அப்போது மாஜிஸ்திரேட்டு எஸ்.ஜே.பியானி அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், ஹரிசந்திர சிர்கர் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து அருகில் நின்று கொண்டிருந்த மகேஷ், நரேஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்களுக்கு தலையில் வெட்டு விழுந்தது.

போலீஸ் விசாரணை

மாஜிஸ்திரேட்டு முன்னால் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஹரிசந்திர சிர்கரை மடக்கி பிடித்தனர்.

காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து போலீசார் ஹரிசந்திர சிர்கரை கைது செய்தனர். அவருக்கு கத்தி எப்படி கிடைத்தது? அதை மறைத்து கோர்ட்டு அறைக்குள் எப்படி கொண்டு வந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாஜிஸ்திரேட்டு முன்னால் நடந்த இந்த சம்பவத்தால் போய்வாடா கோர்ட்டில் பெரும் பரபரப்பு உண்டானது.


Next Story