சினிமா தயாரிப்பாளர் தற்கொலை வழக்கில் பைனான்சியரை பிடிக்க தனிப்படை போலீசார் மதுரை விரைந்தனர்


சினிமா தயாரிப்பாளர் தற்கொலை வழக்கில் பைனான்சியரை பிடிக்க தனிப்படை போலீசார் மதுரை விரைந்தனர்
x
தினத்தந்தி 23 Nov 2017 5:15 AM IST (Updated: 23 Nov 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை வழக்கில் பைனான்சியரை பிடிக்க தனிப்படை போலீசார் மதுரை விரைந்து உள்ளனர்.

பூந்தமல்லி,

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43). இவர், சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சசிகுமார் நடத்தி வரும் ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார்.

கடன் தொல்லை காரணமாக நேற்று முன்தினம் அசோக்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே காரணம் என்றும் அசோக்குமார் கடிதம் எழுதிவைத்து இருந்தார். இதுபற்றி நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் முதல் கட்டமாக வளசரவாக்கம் போலீசார், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அசோக்குமாரின் உடல் நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இறுதி சடங்குகள் செய்வதற்காக அசோக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர்கள் குமரன், முத்துராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்டமாக தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தில் இருப்பது உண்மையில் அவருடைய கையெழுத்து தானா?. அதனை அவர்தான் எழுதினாரா? என்பதை உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர் ஏற்கனவே எழுதி உள்ள கையெழுத்தோடு இதனை ஒப்பிட்டு பார்க்கும் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கடந்த சில மாதங்களாக அசோக்குமாரின் செல்போனுக்கு யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசினார்கள்?. அதில் மிரட்டும் தோனியில் பேசியவர்கள் யார்?. அன்புசெழியன் மிரட்டல் விடுத்தாரா? என்றெல்லாம் ஆய்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அசோக்குமாரின் வீட்டுக்கு வந்து மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். எனவே அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அசோக்குமார் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரிக்கும் பணியிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாக உள்ளார்.

அன்புசெழியனின் சொந்த ஊர் மதுரை. எனவே அவர் அங்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படையில் ஒரு பிரிவினர் அவரை பிடிக்க மதுரைக்கு விரைந்து உள்ளனர்.

மேலும் அவர், விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அன்புசெழியனின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த விவரங்களை அளித்து உள்ளனர்.

அன்புசெழியனிடம் பல சினிமா தயாரிப்பாளர்கள் பணம் வாங்கி உள்ளதும், அதில் சில முக்கிய புள்ளிகள் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் சிரமம் அடைந்து வந்ததாகவும், அதில் சிலர் வாங்கிய தொகைக்கு மேல் வட்டி கட்டியது மட்டுமல்லாமல் தங்களது சொத்துகளையும் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

அன்புசெழியனிடம் வட்டி குறைவு என்பதாலும், எவ்வளவு தொகை என்றாலும் கேட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே தயாரிப்பாளர்களுக்கு கிடைத்து விடும் என்பதாலும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அவரை சார்ந்தே இருந்து வந்துள்ளனர்.

தொகையை கொடுக்கும்போது வெற்று காகிதத்தில் அவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொள்வதும், நிரப்பப்படாத காசோலைகளில் கையெழுத்து வாங்கி கொள்வதும் அன்புசெழியனின் வாடிக்கை. குறித்த நேரத்தில் வாங்கிய பணம் வரவில்லை என்றால் வட்டிக்கு, வட்டி போட்டு வசூல் செய்து விடுவதாகவும், அதில் சிலர் தரமறுத்தால் அடுத்த கட்டமாக மிரட்டும் தோனியில் இறங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் மணி ரத்தினத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஷ்வரன், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் இவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் பணம் வரவில்லை என்றால் அந்த படம் திரைக்கு வராமல் தடுத்து, அந்த படத்தை தனக்கு தெரிந்தவர்கள் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி வினியோகிக்கும் யுக்தியையும் அவர் கையாண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அரசியல் பின்புலம் கொண்ட அன்புசெழியன், தமிழ் சினிமா வட்டாரத்தில் தனது பங்களிப்பு இல்லாமல் எந்த தமிழ்ப்படமும் வெளிவரக்கூடாது என்று இருந்து வந்ததாகவும், இதற்கு முன்பு இவரை பற்றி யாரும் புகார் கூற முன் வராமல் பயந்தும் வந்து உள்ளனர்.

தற்போது அசோக்குமார் தற்கொலை மூலம் அன்புசெழியன் யார்? என்பதை தெளிவாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டார். இதனால் அன்புசெழியன் மீதான விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story