சென்னை புறநகர் பகுதிகளில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சென்னை புறநகர் பகுதிகளில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 11:30 PM GMT (Updated: 22 Nov 2017 10:29 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் சென்னை புறநகர் பகுதிகளில் ரே‌ஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம் சண்முகம் சாலையில் ரே‌ஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். தாம்பரம் ரங்கநாதபுரத்தில் மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம், செம்பாக்கம், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்பட தாம்பரம் தொகுதியில் 50–க்கும் மேற்பட்ட ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் மலங்கானந்தபுரத்தில் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி பகுதிகளில் 90 இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன் ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்.

இதேபோல் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பெருங்குடி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் முன்பு திரு.வி.க.நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பூர் தொகுதி முழுவதும் 6 இடங்களிலும், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 11 இடங்களிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதவரத்தில் பகுதி செயலாளர் துக்காராம், செங்குன்றத்தில் நகர செயலாளர் ராஜேந்திரன், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் சோழவரம் ஒன்றிய செயலாளர் கருணாகரன், புழலில் முன்னாள் நகர செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளத்தூரில் ஐ.சி.எப். முரளி, கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தேவஜவகர், எடப்பாளையத்தில் ஒன்றிய அவைத்தலைவர் காசிமுகமது ஆகியோர் தலைமையிலும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட விம்கோ நகர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமசாமி நகரில் வட்ட செயலாளர் ஆதிகுருசாமி, கிழக்கு குளக்கரை தெருவில் கிழக்கு பகுதி செயலாளர் தனியரசு, எண்ணூரில் முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு, மணலியில் முன்னாள் கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலும் என 47 இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரே‌ஷன் கடை முன்பு நகர செயலாளர் சாமுவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வில்லிவாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் தலைமையிலும், சென்னை முகப்பேர், ஜெ.ஜெ.நகர், திருமங்கலம், ஐ.சி.எப். உள்ளிட்ட பகுதிகளிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், கோவில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story