பாடையுடன் பிணத்தை சுமந்துகொண்டு வாய்க்காலை கடக்கும் கிராமமக்கள்


பாடையுடன் பிணத்தை சுமந்துகொண்டு வாய்க்காலை கடக்கும் கிராமமக்கள்
x
தினத்தந்தி 23 Nov 2017 5:34 AM GMT (Updated: 2017-11-23T11:03:56+05:30)

சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் பாடையுடன் பிணத்தை சுமந்துகொண்டு வாய்க்காலை கடக்கும் கிராமமக்கள் பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம்பாளையம் ஊராட்சி. இங்கு பெரியாண்டிபாளையம் என்ற ஆதிதிராவிடர் காலனி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள். அனைவரும் கூலித்தொழிலாளர்கள்.

பெரியாண்டிபாளையம் கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் கொண்டு சென்று அடக்கம் செய்வார்கள். சுடுகாட்டுக்கு செல்ல மேட்டூர் வலதுகரை வாய்க்காலை கடக்கவேண்டும். அதை விட்டால் சுடுகாட்டுக்கு செல்ல அவர்களுக்கு வேறு பாதை கிடையாது. வாய்க்காலில் தண்ணீர் வராதபோது இதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் தண்ணீர் வந்துவிட்டால் ஆபத்து என்று தெரிந்தும் வேறு வழி இல்லாமல் பாடையில் பிணத்தை வைத்து கட்டி தலைக்குமேல் தூக்கிக்கொண்டு ஆபத்தை எதிர்கொண்டு கடந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியாண்டிபாளையத்தை சேர்ந்த சின்னபொன்னான் என்பவருடைய மனைவி கண்ணாயாள் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பகல் 2.30 மணி அளவில் கண்ணாயாளின் உடலை அடக்கம் செய்ய, பாடையில் உடலை வைத்து கட்டி, கழுத்தளவு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் நீந்தியபடி கடந்து அக்கரை சென்றார்கள். அதன்பின்னர் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தார்கள்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, ‘கடந்த 50 ஆண்டுகளாக வாய்க்காலை கடந்துதான் பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்கிறோம். வாய்க்காலில் தண்ணீர் வரும் காலங்களில் யாராவது இறந்துவிட்டால், உயிரை பணயம் வைத்து நீந்தி மறுகரைக்கு உடலை கொண்டுசெல்லவேண்டி உள்ளது. தேர்தல் வரும்போதெல்லாம், வாய்கால் குறுக்கே பாலம் கட்டித்தருகிறோம் என்கிறார்கள். அதன்பின்னர் மறந்துவிடுகிறார்கள்.

அமைச்சரின் தொகுதியாக இருந்தும் எங்களுடைய கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இனியாவது பாலம் கட்டித்தந்தால் பயன்பெறுவோம்‘ என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். வாழும்போது துன்பங்களை மட்டுமே கண்ட மக்கள் இறந்தபின்னரும் இறுதி ஊர்வலத்திலும் துன்பத்தை சந்திக்கிறார்கள்.

Next Story