தபால்துறை அதிகாரி வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கோபியில் தபால்துறை அதிகாரி வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி கவிதா காலனியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 63). இவர் ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி ஆவார். செங்கோட்டையன் நேற்று முன்தினம் உறவினர் திருமணத்துக்காக தனது குடும்பத்துடன் கோவை சென்றுவிட்டார். திருமணம் முடிந்ததும் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 19 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டை பூட்டிவிட்டு சென்றபிறகு யாரோ மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 19 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து செங்கோட்டையன் கோபி போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தார்கள். செங்கோட்டையன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.