ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் கோர்ட்டில் ஆஜர் ஜெயிலில் நீதிபதி ஆய்வு செய்யகோரி மனுதாக்கல்


ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் கோர்ட்டில் ஆஜர் ஜெயிலில் நீதிபதி ஆய்வு செய்யகோரி மனுதாக்கல்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:45 AM IST (Updated: 24 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஜெயிலில் செல்போன் பறிமுதல் வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் வழக்கு தொடர்பாக ஜெயிலில் நீதிபதி ஆய்வு நடத்த கோரி முருகனின் வக்கீல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதி முருகனின் அறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் கைப்பற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-1) நடந்து வருகிறது.

இந்த வழக்கில், முருகனிடம் இருந்து தான் செல்போன் கைப்பற்றப்பட்டதாக ஏற்கனவே அரசு தரப்பு சாட்சிகள் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு குறித்த விசாரணைக்காக முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலில் இருந்து சத்துவாச்சாரி கோர்ட்டுக்கு நேற்று காலை 10.30 மணி அளவில் அழைத்து வரப்பட்டார். பின்னர் போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையை மேற்கொண்ட மாஜிஸ்திரேட்டு வழக்கு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, முருகன் மீண்டும் 12.40 மணி அளவில் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து முருகன் தரப்பு வக்கீல் அருண் கூறுகையில், ‘செல்போன் கைப்பற்றப்பட்டதாக முருகன் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்காகும். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் நாங்கள் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளோம். அதில் வேலூர் ஜெயிலில் செல்போன்கள் கைப்பற்றப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. கைதிகள் செல்போன் கொண்டு செல்ல முடியாது. இதுகுறித்து நீதிபதி கொண்ட வக்கீல்கள் குழு, ஜெயிலில் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். இதுதொடர்பான உத்தரவும் அடுத்த வாய்தாவில் (அதாவது வருகிற 4-ந் தேதி) மாஜிஸ்திரேட்டு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.


Next Story