சுங்கச்சாவடிகளில் கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சுங்கச்சாவடிகளில் கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடிகளில் கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டத்தில் திருவலம், கேதாண்டிபட்டி, ஆம்பூர் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி முதல் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரைவை தொடங்கியது. ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒருமுறை சென்றுவர சுங்கச்சாவடிகளில் 425 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர்.

இந்த கட்டணத்தை விவசாயிகளிடம் வசூலிக்ககூடாது என்று வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவரும், கரும்பு உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தலைவருமான சி.கே.தனபால் தலைமையில் விவசாயிகள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சி.கே.தனபால் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வாங்கக்கூடாது என பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். ஏற்கனவே ஓட்டிய கரும்புக்கு 3 ஆண்டுகளாக பணம் தரவில்லை.

கரும்புக்கு என்ன விலை என்றே தெரியவில்லை. டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இந்த நிலையில் கரும்பு லாரிகளுக்கு சுங்கவரி கட்டணம் வசூலிப்பது வேதனை அளிக்கிறது. வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதுவரையில் கரும்பு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒரு பைசா கூட சுங்கச்சாவடி மையங்களில் கட்ட மாட்டோம்’ என்றார்.

அப்போது கரும்பு ஏற்றி கொண்டு வந்த லாரியை சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் லாரியை ஏன் தடுத்த நிறுத்தினாய் என்று கேட்டு, அந்த ஊழியரை தாக்க முயன்றனர். அப்போது விவசாயிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story