இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. பெயர் கிடைத்ததற்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. பெயர் கிடைத்ததற்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 10:30 PM GMT (Updated: 23 Nov 2017 8:56 PM GMT)

இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. பெயர் கிடைத்ததற்கு திருப்பூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

திருப்பூர்,

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. கட்சி பிளவுபட்டு பல்வேறு அணிகளாக பிரிந்தன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பெயர் மற்றும் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பெயர், இரட்டை இலை சின்னம் வேண்டி முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் அணியினரும், தினகரன் அணியினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.

இதில் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. பெயர் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் அணியினர் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அந்த வகையில் திருப்பூருக்குட்பட்ட பகுதியில் உள்ள அ.தி.மு.க.வினரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி நேற்று மதியம் திருப்பூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க.வினர் கூடினார்கள்.

இனிப்பு வழங்கினார்கள்

இவர்கள் கோஷங்கள் எழுப்பியதுடன் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்திற்கு அ.தி.மு.க.வின் திருப்பூர் மாநகர், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும், அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பஸ் பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த கொண்டாட்டத்தில் முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், கணேஷ், டெக்ஸ்வெல்முத்து, கருவம்பாளையம் மணி, கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story