துபாயில் இருந்து சென்னைக்கு பார்சலில் கடத்தி வந்த ½ கிலோ தங்கம் சிக்கியது


துபாயில் இருந்து சென்னைக்கு பார்சலில் கடத்தி வந்த ½ கிலோ தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து சென்னைக்கு பார்சலில் கடத்தி வந்த ½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு தபால் முனையத்துக்கு துபாயில் இருந்து சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள மின்ஹாஜ் என்பவருக்கு பார்சல் ஒன்று வந்தது. அதில் வீட்டு அலங்கார பொருட்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த பார்சலை பார்த்து சந்தேகம் அடைந்த தபால் துறை அதிகாரிகள், இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த பார்சலை பெற்றுக்கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், விசாரணைக்கு வருமாறு அந்த பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரிக்கு கடிதம் அனுப்பினார்கள்.

ஆனால் அந்த முகவரியில் இருந்து யாரும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் ‘ஜக்’ ஒன்று இருந்தது. ஆனால் அது வழக்கத்தை விட மிக கனமாக இருந்தது.

இதையடுத்து அந்த ‘ஜக்கை’ உடைத்து பார்த்த போது, அதில் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டப்பட்ட தங்க கம்பிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.15 லட்சம் மதிப்புள்ள ½ கிலோ தங்க கம்பிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த தங்கம் யாருக்காக துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டது. அந்த பார்சலில் உள்ள முகவரி சரியானதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Next Story