திருப்பத்தூர் அருகே கல்லூரி பேராசிரியர் தூக்குப் போட்டு தற்கொலை
திருப்பத்தூர் அருகே கல்லூரி பேராசிரியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை,
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் செல்வபெருமாள் (வயது 40), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எலிசபெத்ராணி (37). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு வைத்தீஸ்வரி என்ற மகளும், மதனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள பள்ளியில் வைத்தீஸ்வரியும், மதனீஸ்வரனும் படித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலைக்காக செல்வபெருமாள் முயற்சி மேற்கொண்டார். அதற்காக திருப்பத்தூரை அடுத்த அண்ணான்டப்பட்டி ஹயாத்நகரை சேர்ந்த தனது மாமனார் போஸ்கோவிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.
வெகுநாட்கள் ஆகியும் செல்வபெருமாளுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. அதனால் மாமனாரிடம் வாங்கிய கடன் ரூ.7 லட்சத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனுடன் கோபித்து கொண்டு எலிசபெத்ராணி தனியாக வசித்து வந்தார். திடீரென மகள் வைத்தீஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால் வைத்தீஸ்வரியை அழைத்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு எலிசபெத்ராணி வந்தார். அங்கு செல்வபெருமாளும் தனது மகளை பார்க்க வந்தார்.
அப்போது செல்வபெருமாளிடம் எலிசபெத்ராணி பணத்தை எப்போது தனது தந்தைக்கு கொடுக்க போகிறீர்கள்? என கேட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வபெருமாள் மனவேதனை அடைந்து நேற்று முன்தினம் மாமனார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.