வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் குவிப்பு


வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2017 4:45 AM IST (Updated: 1 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2015–ம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம், முடிச்சூர், ஆதனூர், ஊரப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் ஒரு மாதத்திற்கு மேல் மழை நீர் வீடுகளை சுற்றி தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. இதில் இருந்து அந்த பகுதி மக்கள் மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆனது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட வெள்ளத்தடுப்பு அதிகாரி அமுதா வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது பல இடங்களில் அடையாறு ஆற்றின் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அடையாறு ஆற்றின் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு ஒரு சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அடையாறு கால்வாய்கள் அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு சிலர் கோர்ட்டுக்கு சென்றதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை,

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வட கிழக்கு பருவ மழை தொடங்கிய போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்தது. இதன் காரணமாக மீண்டும் வரதராஜபுரம், முடிச்சூர், ஆதனூர், ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் சொந்த வீடுகளை விட்டு பலர் தங்களது முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட வெள்ளத்தடுப்பு அதிகாரி அமுதா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் பகுதியில் பார்வையிட்ட போது அந்த பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு வெள்ளம் வருவதற்கு முக்கிய காரணம் ஆதனூரில் தொடங்கி மாடம்பாக்கம், மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்தூர் வழியாக செல்லும் அடையாறு ஆற்றின் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் என்று குற்றம் சாட்டினார்கள்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை பார்த்து ஆதனூரில் தொடங்கி வரதராஜபுரம் வழியாக செல்லும் அடையாறு ஆற்றின் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தீவிரமாக கணக்கீடு செய்தனர்.

அதன் பின்னர் சமீபத்தில் வந்த கோர்ட்டு உத்தரவுப்படி ஆதனூர், மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாறு கால்வாய்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை தீவிரமாக அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றின் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த 186 வீடுகளுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினார்கள். இதனையடுத்து ஒரு சிலர் தங்களது வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து சென்றனர். ஆனால் பெரும்பாலான வீடுகளில் நேற்று வரை வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வரதராஜபுரம் பகுதியில் பெண் போலீசார் உள்பட 500–க்கும் மேற்பட்ட போலீசார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10–க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வரதராஜபுரத்தில் உள்ள குமரன் நகர், அஷ்டலட்சுமிநகர், மகாலட்சுமி நகர், ஸ்ரீராம்நகர், புவனேஷ்வரி நகர் பகுதியில் அடையாறு ஆற்றின் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பல மாடி வீடுகளை இடித்துத்தள்ளினார்கள்.

ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது பொருட்களை எடுப்பதற்கு சில மணி நேரம் கால அவகாசம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சில மணி நேரம் அவகாசம் வழங்கினர். இதனையடுத்து அவசரமாக வீட்டு கதவு, ஜன்னல் மற்றும் முக்கியமான பொருட்களை வேன்களில் ஏற்றிக்கொண்டு தங்களது உறவினர்களின் வீட்டுக்கு வேதனையுடன் பொதுமக்கள் சென்றனர்.

அஷ்டலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் போது அதிர்ச்சி அடைந்த சித்ரா (வயது 48), என்ற பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வரதராஜபுரம் பகுதியில் தொடர்ந்து அடையாறு ஆற்றின் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரதராஜபுரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், ஏதாவது கலவரம் நடந்தால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்:–

வரதராஜபுரம் பகுதியில் 186 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 50 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு வரதராஜபுரம் பகுதியில் கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும். வீடுகளை இழக்கக்கூடிய 186 பேருக்கும் நாவலூர் பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story