மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதில் பா.ஜனதா கட்சியில் சேர திட்டமா?


மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதில் பா.ஜனதா கட்சியில் சேர திட்டமா?
x
தினத்தந்தி 1 Dec 2017 12:11 AM GMT (Updated: 1 Dec 2017 12:11 AM GMT)

பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாக வெளியான தகவல்களுக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதிலளித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘‘மத்திய அரசு சரக்கு–சேவை வரி திட்டத்தை அமல்படுத்திய பிறகு கர்நாடகத்தில் அனைத்து வணிகவரி சோதனை சாவடிகளும் மூடப்பட்டுவிட்டன. ஒருவேளை ஏதாவது சோதனை சாவடிகள் திறந்திருந்தால், அது போக்குவரத்து மற்றும் வனத்துறைக்கு சொந்தமானவையாக இருக்கலாம். சோதனை சாவடிகள் மூடப்பட்ட பிறகும் வாகனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக எடியூரப்பா, குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை நான் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளேன்.

அவர்களின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்க மாட்டேன். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்பேன். சரக்கு–சேவை வரி திட்டம் அமலுக்கு வந்த பிறகு எச்.ஏ.எல். நிறுவனம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. என்ன இருந்தாலும், சரக்கு–சேவை வரி திட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதை சரியாக அமல்படுத்தினால் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறையும்.

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 86 ஆயிரத்து 750 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளின் தொழில் நிறுவனங்கள் கர்நாடகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

கர்நாடக தொழில் வளர்ச்சி ஆணையத்தில் 10 சேவைகள் சகாலா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் உண்மை இல்லை. நான் காங்கிரசைவிட்டு விலக மாட்டேன். என் மீது பிரதமர் மோடி நல்ல எண்ணங்களை கொண்டுள்ளார். அது 3 ஆண்டுகளாக தான். ஆனால் எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நட்புறவு உள்ளது.’’

இவ்வாறு தேஷ்பாண்டே கூறினார்.


Next Story