பா.ஜனதா எம்.பி.யை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
கித்தூர் ராணி சென்னம்மா பற்றி தவறான தகவலை வெளியிட்டதாக கூறி பா.ஜனதா எம்.பி.யை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
சுதந்திர போராட்ட வீராங்கனை கித்தூர் ராணி சென்னம்மா குறித்து தவறான கருத்து தெரிவித்த பா.ஜனதாவை சோர்ந்த பிரதாப்சிம்ஹா எம்.பி.யை கண்டித்து பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு கர்நாடக காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவி லட்சுமி ஹெப்பால்கர் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் கைகளில் பதாகைகளை ஏந்தி இருந்தனர். பிரதாப்சிம்ஹா எம்.பி.யை கண்டிக்கும் வாசகங்கள் அதில் இடம் பெற்று இருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பிரதாப்சிம்ஹாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் லட்சுமி ஹெப்பால்கர் பேசியதாவது:–
கித்தூர் ராணி சென்னம்மா நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தார். அவரை பற்றி கர்நாடகம் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கு தெரியும். பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப்சிம்ஹா எம்.பி.யின் சமூக வலைத்தள பக்கத்தில் கித்தூர் ராணி சென்னம்மா பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.பா.ஜனதாவினர் ஒட்டுமொத்த பெண் சமூகத்தை அவமானப்படுத்திவிட்டனர். அந்த கட்சிக்கு தக்க நேரத்தில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.
Related Tags :
Next Story