கோவில்பட்டி–திருச்செந்தூர் பகுதியில் 2–வது நாளாக கனமழை; வீடுகள் சேதம்


கோவில்பட்டி–திருச்செந்தூர் பகுதியில் 2–வது நாளாக கனமழை; வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 2 Dec 2017 3:00 AM IST (Updated: 1 Dec 2017 7:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி–திருச்செந்தூர் பகுதியில் 2–வது நாளாக கனமழை பெய்தது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

திருச்செந்தூர்,

கோவில்பட்டி–திருச்செந்தூர் பகுதியில் 2–வது நாளாக கனமழை பெய்தது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கோவில்பட்டி துரைச்சாமிபுரத்தில் குருவம்மாள், வடக்கு இலுப்பையூரணியில் முத்து, கூசாலிபட்டியில் சுப்புலட்சுமி ஆகியோருக்கு சொந்தமான ஓட்டு வீடுகள் திடீரென்று இடிந்து விழுந்தன. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவில்பட்டி நடராஜபுரம் 3–வது தெருவில் துரைபாண்டி மனைவி நாகமணிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. ஆனால் அந்த வீட்டில் யாரும் வசிக்காததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

கயத்தாறு

கயத்தாறு அருகே கொத்தாளி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவருக்கு சொந்தமான மாட்டு தொழுவம் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பசு மாடும், ஒரு ஆடும் இறந்தது. மேலும் அங்குள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் சென்றது. அந்த தாம்போதி பாலத்தின் அடியில் சிக்கி இருந்த சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.

வடக்கு மயிலோடை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளிக்கூடத்தின் மீது பழமைவாய்ந்த வாகை மரம் சரிந்து விழுந்தது. பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த கிராமத்தில் 4 ஓட்டு வீடுகளும் பலத்த மழையில் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே தெற்கு பனையூர், மேல்மாந்தை ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

சக்கம்மாள்புரம், டி.சுப்பையாபுரம், ஏ.குமாரபுரம், மாமுநைனாபுரம், மேல்மாந்தை, ஆற்றங்கரை, என்.ஜெகவீரபுரம், புதூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 வீடுகள் பகுதி அளவு இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. கமலாபுரத்தில் பயிரிடப்பட்டு இருந்த கம்பு, மக்காச்சோளம், மிளகாய், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

உடன்குடி

உடன்குடி வாரச்சந்தை பின்புறம் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் பழமைவாய்ந்த புளியமரம் சரிந்து விழுந்தது. அதன் கிளைகள் மின் ஒயரில் விழுந்ததால், அங்கிருந்த 4 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்தன. உடன்குடி–செட்டியாபத்து ரோட்டில் 2 மின் கம்பங்கள் சரிந்தன. உடன்குடி சிதம்பரம் தெரு, பிள்ளையார் பெரியவன் தெரு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தது.

உடன்குடி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் பொன்கிளி(வயது 60) என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த பொன்கிளி, அவருடைய மகள் ஆனந்தஜோதி(35) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மணப்பாடு

மணப்பாட்டில் கடல் சீற்றமாக இருந்ததால், கடற்கரையில் உள்ள மீன்பிடி வலைகள் பழுது பார்க்கும் கூடம், மீன்கள் ஏலம் விடும் கூடம் போன்றவை சேதம் அடைந்தன. உடன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்றும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் ஏ.டி.எம். மையங்களும் செயல்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

காயல்பட்டினம் மங்களவாடி சல்லிதிரடு பகுதியில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வாறுகால் அமைத்து கடலுக்கு அனுப்பினர். மேல ஆத்தூர், ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் பகுதிகளில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. அவற்றை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து எழில், ஜான்சிராணி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story