இந்தி நடிகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது


இந்தி நடிகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2017 9:53 PM GMT (Updated: 1 Dec 2017 9:53 PM GMT)

இந்தி நடிகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த இந்தி நடிகை சாயேஷா சைகல். இவர், கார் பகுதியில் நர்கிஸ் தத் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12–வது மாடியில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் இந்த கட்டிடத்திற்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கட்டிட காவலாளியிடம் 4–வது மாடியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கூறி சென்றார்.

ஆனால் அந்த வாலிபர் 4–வது மாடிக்கு செல்வதற்கு பதிலாக 12–வது மாடியில் உள்ள நடிகை சாயேஷா சைகலின் வீட்டிற்கு சென்று, அவரது வீட்டு அழைப்பு மணியை அழுத்தி உள்ளார். அப்போது நடிகை சாயேஷா சைகல் வீட்டில் இல்லை. அவரது உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தார். அவர் கதவை திறந்து பார்த்தார்.

அப்போது வெளியில் நின்ற வாலிபர் நடிகையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகையின் உறவினர் அந்த வாலிபரை வெளியே தள்ளி கதவை பூட்டினார்.

உடனே இதுபற்றி கட்டிட காவலாளிக்கு தகவல் கொடுத்தார். அவர் மேலே வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். நடிகையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றது பற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் பெங்களூருவை சேர்ந்த திலிப் தாஸ்(வயது32) என்பது தெரியவந்தது. நடிகையின் வீட்டிற்குள் வாலிபர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story