தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் தேநீர் அருந்திய பட்னாவிஸ்


தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் தேநீர் அருந்திய பட்னாவிஸ்
x
தினத்தந்தி 2 Dec 2017 3:32 AM IST (Updated: 2 Dec 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

பீட் மாவட்டத்தை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர் வீட்டில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேநீர் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று பீட் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே, பீட் நகரில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகரின் இல்லத்துக்கு திடீரென அவர் சென்றார். அவரை ஜெயதத் சிர்சாகர் எம்.எல்.ஏ. வரவேற்றார். இதைத்தொடர்ந்து, இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். தேவேந்திர பட்னாவிஸ் தேநீர் அருந்தினார்.

வருகிற 7–ந் தேதி மராட்டிய மேல்–சபை இடைத்தேர்தலும், வருகிற 11–ந் தேதி சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெற உள்ள சூழலில், இருவரும் சந்தித்து பேசி கொண்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றும், இது தனிப்பட்ட சந்திப்பு என்றும் ஜெயதத் சிர்சாகர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் சுனில் தத்காரேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘யாருடைய வீட்டுக்கு போக வேண்டும், யாருடைய வீட்டுக்கு போக கூடாது என்பது குறித்து முடிவு எடுப்பது முதல்–மந்திரியின் தனிப்பட்ட உரிமை. ஆனாலும், பீட் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 161 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். அவர்களில் யாருடைய வீட்டுக்காவது அவர் நலமாய் இருக்கும்’’ என்றார்.

Next Story