பைனான்சியர் அன்புசெழியன் மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார்
பைனான்சியர் அன்புசெழியன் மீது மற்றொரு சினிமா தயாரிப்பாளர் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.
பூந்தமல்லி,
சினிமா இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் பைனான்சியர் அன்புசெழியன் தலைமறைவாக உள்ளார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவரும் நிலையில், அன்புசெழியன் மீது மற்றொரு சினிமா தயாரிப்பாளர் புகார் அளித்து உள்ளார்.
சென்னை தியாகராயநகர், பசுல்லா சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன். சினிமா தயாரிப்பு நிறுவன உரிமையாளர். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:–
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 கோடி செலவில் ‘மாங்கா’ என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தை தான் வெளியிடுவதாகவும், வரும் லாபத்தில் 10 சதவீதம் அளிக்குமாறும் பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் கேட்டனர். படத்தை வெளியிடுவதற்காக வெங்கடேசனும் அதிக பணம் செலவழித்துள்ளார்.
படம் வெளியான பின்பு தனக்கான பங்கை அன்புசெழியன் மற்றும் அழகரிடம் கேட்டபோது பணத்தை தரமறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வீட்டில் உள்ள மனைவி மற்றும் பெரியவர்களை ஆள்வைத்து மிரட்டியதாகவும், இதனால் பயந்து சொந்த ஊருக்கே சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அப்போதே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து இருந்ததாகவும் வெங்கடேசன் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கொடுத்த ஆதரவில் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் அன்புசெழியனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு கோரியும் அவர் மனு அளித்துள்ளார்.