அடிபட்ட விலங்குகளை, அரவணைக்கும் குடும்பம்
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்-மந்தாகினி தம்பதியர், வாழ்க்கையை வித்தியாசமாக வாழ்கிறார்கள்.
வனவிலங்கு ஆர்வலர்களான இவர்கள், தங்களது வீட்டில் ஏராளமான வனவிலங்குகளை வளர்க்கிறார்கள்.
சிறுத்தை, நரி, முதலை, விஷ பாம்புகள், கரடி... என பயமுறுத்தும் இனங்கள், இவர்களது வீட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றன. இந்த வீட்டில் கதவை தவிர, வேறு கூண்டுகளோ, முள் கம்பி அடைப்புகளோ கிடையாது. எத்தகைய கொடிய விலங்காக இருப்பினும், அவை சுதந்திரமாகவே உலா வரும் வகையில் வளர்க்கப்படுகிறது.
“1970-களில் நானும் என்னுடைய மனைவி மந்தாகினியும், காட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தண்டரயனா காடுகளுக்குள் பயணம் மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வாழும் மடியா கோண்ட் பழங்குடியின மக்கள், குரங்குகளை வேட்டையாடிவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பிடிபட்ட குரங்குகள் மூங்கில் கம்புகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் ஒரு பெண் குரங்கு இறந்துவிட, அதன் குட்டி மட்டும் பரிதாபத்தோடு கத்திக்கொண்டிருந்தது. அது பார்ப்பதற்கே பரிதாபமான காட்சி. ஏனெனில் இறந்த தாயிடமிருந்து, தாய்ப்பாலை எதிர்பார்த்தப்படி, அந்த குரங்கு குட்டி துவண்டு போயிருந்தது. அந்த காட்சி என்னையும், என் மனைவி மந்தாகினியையும் பெரிதும் பாதித்தது. பழங்குடியின மக்களிடம் அந்த குட்டி குரங்கை விட்டுவிடுமாறு மன்றாடினோம். ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை. அதனால் பழங்குடியின தலைவரை சந்தித்து, நடந்ததை தெரிவித்தோம். அவரிடம் அனுமதி வாங்கி, அந்த குட்டி குரங்கை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தோம். எங்களின் வீட்டிற்குள் நுழைந்த முதல் விலங்கு அந்த குரங்கு தான்” என்று பொறுப்பாக பேசும் பிரகாஷ், பழங்குடியின மக்களிடம் ஒரு உடன்படிக்கையும் ஏற்படுத்தி கொண்டார். வேட்டையாடுபவர்கள் இளம் விலங்குகள், வேட்டையில் தனித்துவிடப்படும் விலங்குகள், காயமடைந்த விலங்குகளை கொல்வதற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுக்க, அவர்களும் பிரகாஷிற்கு இசைந்து கொடுத்திருக்கின்றனர். அப்படி உருவானதுதான் இந்த சின்ன சரணாலயம்.
“குரங்கு வளர, வளர.... எங்களுக்குள் இருந்த வனவிலங்கு நேசமும் வளர்ந்தது. பல பழங்குடியின கிராமங்களில் தங்கியிருந்து காயம்பட்ட வனவிலங்குகளுக்கு சிகிச்சை வழங்கினோம். மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் வனவிலங்குகளை, வீட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுத்தோம். வேட்டையில் பாதிக்கப்பட்டவை மட்டுமின்றி சாலையில் அடிபடும் விலங்குகளையும், அரவணைக்க ஆரம்பித்தோம்.
சாலையில் அடிபட்ட மான்களை கொண்டுவந்தோம். இன்று மான் கூட்டமாக மாறிவிட்டது. வயிறு பகுதி கிழிந்த நிலையில், உயிருக்கு போராடிய சிறுத்தையை காப்பாற்றினோம். அது இன்று என்னுடைய செல்ல பிராணியாக மாறிவிட்டது. ஊருக்குள் புகுந்த முதலை, ஒரு காலை இழந்த மயில், விபத்தில் சிக்கிய கரடி.... என என்னுடைய வீடு காட்டு விலங்குகளின் மறுவாழ்வு மையமாக மாறிவிட்டது” என்று பேசும் பிரகாஷ், மருத்துவம் பயின்றிருப்பதால் காயம்பட்ட விலங்குகளுக்கு சுலபமாக சிகிச்சை அளிக்கிறார். இவரது மனைவி மந்தாகினியும் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்திருப்பவர் என்பதால், பிரகாஷின் வேலை சுலபமாகிவிட்டது.
“பார்ப்பதற்கு தான் இவை வனவிலங்குகள். ஆனால் பாசத்தில் செல்ல பிராணிகளை மிஞ்சிவிடும். என்னிடம் மட்டுமின்றி, என்னுடைய மொத்த குடும்பத்தினரிடமும், இவை பாசமாக பழகுகின்றன. மான் குட்டிகளுக்கு என்னுடைய மனைவி, புட்டி பால் கொடுக்கிறாள். சில சமயம் சிறுத்தை குட்டிகளுக்கும் அவள் தான் அம்மா. என்னுடைய பேரக்குழந்தைகள் ஆபத்தான முதலைகளை சர்வசாதாரணமாக சமாளிக் கிறார்கள். முதலைகளுக்கான உணவுகளை பேரக்குழந்தைகள் தான் கொடுக்கிறார்கள். என்னுடைய மகனுக்கு நரிகளுடன் விளையாடுவதில் ஆனந்தம். மருமகள், மயில்களுடன் கொஞ்சி மகிழ்கிறாள். பேரப்பிள்ளை பாம்புகளுடன் பின்னி பிணைந்தப்படி நெகிழ்கிறான். அந்தளவிற்கு வனவிலங்குகள் நெருக்கமாகிவிட்டன” என்பவர் காட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காகவும் உழைக்கிறார். அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று மருத்துவ உதவிகளை செய்வதோடு, பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வியும் கற்பிக்கிறார். அதனால் பழங்குடியினரின் வாழ்வும் உயர்ந்திருக்கிறது. இப்போது பழங்குடியினத்தவர் களில் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பட்டதாரிகள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களின் சேவைக்காக கடந்த 2008-ம் ஆண்டு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பல மாநில விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் இவர்களது வாழ்க்கை வரலாறு, இந்தி திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.
Related Tags :
Next Story